சபரிமலை: "சபரிமலையில் வரும் 26ம் தேதியிலும், தமிழகத்தில் 27லும் மண்டலபூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் சபரிமலை மண்டலபூஜை தேதியை கருத்தில் கொண்டு பயணத்தை வகுக்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. கேரளாவில் நவ.,16ல் கார்த்திகை ஒன்றாம் தேதி பிறந்தது. இதனால் அன்றைய தினம் சபரிமலை நடை திறந்து, அன்று முதல் தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. 41வது நாள் அதாவது டிச.,26ல் மண்டலபூஜை நடைபெறுகிறது. அன்று பகல் 12.30 மணிக்கு இந்த பூஜைகள் நடைபெறும். அதற்கு முன்பாக கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் களபபூஜை நடைபெற்று, ஸ்ரீகோயிலுக்குள் எடுத்து செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இதனால் அன்று காலை 11 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். மண்டலபூஜை முடிந்து நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை, இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். அதன் பின்னர் மகரவிளக்கு கால பூஜைக்காக டிச.,30ம் தேதி மாலையில் திறக்கப்படும். தமிழ்நாட்டில் கார்த்திகை ஒன்றாம் தேதி நவ.17ல் பிறந்தது. இதனால் தமிழக கோயில்களில் இம்மாதம் 27ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதை கருத்தில் கொண்டு 27ல் சபரிமலை நடை திறந்திருக்குமா என தமிழக பக்தர்கள் விசாரிக்கின்றனர். 26ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்டால், அதன் பின்னர் பம்பையிலிருந்து பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் 27ம் தேதி வருபவர்கள் நடை திறக்க 3 நாட்களும், நெய்யபிஷேகத்துக்கு 4 நாட்களும் காத்திருக்க வேண்டும். எனவே சபரிமலையில் 26ம் தேதி மண்டலபூஜை என்பதை கருத்தில் கொண்டும், அன்று காலை 11 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். இதற்கு தகுந்தாற்போல் தமிழக பக்தர்கள் தங்கள் பயணத்திட்டத்தை வகுக்க வேண்டும், என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.