சபரிமலை: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் காரணமாக தரிசனத்துக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். சபரிமலையில் நடப்பு மண்டல சீசனில் தொடர்ச்சியாக கூட்டம் அதிகமாக உள்ளது. கார்த்திகை மாத தொடக்கத்தில் ஒன்றிரண்டு நாட்களை தவிர்த்தால் எல்லா நாட்களுமே அதிகமாக கூட்டம் காணப்பட்டது. அதிகாலையில் கூட்டம் அதிகமாகவும், மதிய நேரத்தில் இது சற்று குறைந்து அதன் பின்னர் இரவு கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால் கடந்த மூன்று நாட்களாக 24 மணி நேரம் இடைவெளி இல்லாமல் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இதனால் நடைப்பந்தலில் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. கூட்டம் அதிகரித்துள்ளதால் சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போலீஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பம்பையில் பக்தர்களை தடுத்து நிறுத்துகின்றனர். அரை மணி நேரம் இடை வெளிவிட்டு கட்டம் கட்டமாக பக்தர்கள் அனுப்பப்படுகின்றனர். இது போல கடைகள் உள்ள பகுதிகளில் வாகனங்களும் தடுத்து நிறுத்தப்படுகிறது. பின்னர் 50 வாகனங்கள் வீதம் பம்பைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் பயண வழியிலும், பின்னர் மலை ஏறிய பின்னர் சரங்குத்தியிலிருந்தும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை பக்தர்கள் கியூவில் நிற்கின்றனர். இதனால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கியூவில் நிற்பவர்களுக்கு தேவசம்போர்டு சார்பில் பிஸ்கட், தண்ணீர் வழங்கப்படுகிறது.