பதிவு செய்த நாள்
10
டிச
2013
06:12
சபரிமலை: சபரிமலையில் வசதிகளை மேம்படுத்தாமல், மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன, என, இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ராஜசேகரன் கூறினார்.
சபரிமலையில், அவர் கூறியதாவது: சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு, "மண்டலம், "மகர விளக்கு காலங்களில், நான்கு ரயில் நிலையங்கள் மூலம், ரயில்வே துறைக்கு, 200 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. ஆனால் தேவைக்கு ஏற்ப, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படவில்லை; விடப்படும் சில ரயில்களும், ஒரு சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்படுவதால், பக்தர்களால் பயன்படுத்த முடியவில்லை. கேரளாவின் முக்கிய வருமானமே, சபரிமலை காலங்களில் தான். ஆனால், சபரிமலை காலங்களுக்காக, மத்திய, மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை; மாநில பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதி கூட, முழுமையாக செலவு செய்யப்படவில்லை. சபரிமலை பக்தர்களுக்கான வசதிகள் பற்றி, ஆய்வு செய்த நீதிபதிகள் குழு அறிக்கைகள் கிடப்பில் உள்ளன. கேரளா முழுவதும் சென்று, மக்களிடம் மனு வாங்கும் முதல்வர் உம்மன் சாண்டி, சபரிமலைக்கு வந்து, பக்தர்களின் குறைகளை, இரண்டு நாட்கள் கேட்கலாம். சபரிமலை கோயிலில், பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்க வேண்டும். "நவீனம் என்ற பெயரில் அதிகரிக்கப்பட்டுள்ள, தங்கும் அறை வாடகை கட்டணத்தை குறைக்க வேண்டும். ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் அருகே விமான நிலையம் அமைப்பதை அனுமதிக்க முடியாது. இதற்கு பதிலாக, பந்தணந்திட்டை மாவட்டத்தில், வேறு இடம் பார்க்கலாம். இவ்வாறு கூறினார்.