சபரிமலை: சபரிமலையில் மண்டலகாலம் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. சில நாட்களை தவிர்த்தால் பக்தர்கள் கூட்டம் தினமும் அலை மோதுகிறது. கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பெரும்பாலான நாட்களிலும் காலையிலும், மாலையிலும் நான்கு மணிக்கு பதிலாக மூன்று மணிக்கே நடை திறக்கப்பட்டது. இதனால் வருமானமும் கடந்த சீசனை விட 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அரவணை விற்பனை மூலம் 22.92 கோடி ரூபாய். கடந்த சீசனில் இதே நாளில் 19.60 கோடி ரூபாயாக இருந்தது. காணிக்கை 21 கோடி ரூபாய். கடந்த ஆண்டு இதே நாளில் 17 கோடி ரூபாயாக இருந்தது. அப்பம் விற்பனை நான்கு கோடியே 93 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த அண்டை விட சுமார் ஒரு கோடி ரூபாய் அதிகமாகும். சன்னிதானத்தில் அறை வாடகையாக மட்டும் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது 78 லட்சம் ரூபாயாக இருந்தது. அறைகளில் டைல்ஸ் பதித்து நவீனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஐந்து மடங்கு வரை வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளதால் வருமானமும் அதிகரித்துள்ளது. இதுபோல தங்கம், வெள்ளி போன்றவையும் காணிக்கையாக கிடைத்துள்ளது.