விநாயகர் கோவிலில் தீயுடன் மா விளக்கு சாப்பிட்ட பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2013 10:12
ஆலங்குடி: ஆலங்குடி அருகே புள்ளான்விடுதியில் விநாயகர்கோவில் வழிபாட்டில் குழந்தைகள் உட்பட பக்தர்கள் பலர் தீயுடன் மா விளக்கை சாப்பிட்டனர். ஆலங்குடி அருகே புள்ளான்விடுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில், பிள்ளையார் நோன்பு விழா நடந்தது. கார்த்திகை தீபத்திற்கு சஷ்டி திதியும், சதயம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் பிள்ளையார் நோன்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் விநாயகரை வைத்து வணங்குபவர்களே இந்த விழாவை கொண்டாடுகின்றனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக விநாயகருக்கு பிடித்த கொலுக்கட்டை, பொறிகடலை, எள்ளுருண்டை, பொங்கல் வைத்து விநாயகர் பாடல்களை பாடிய பிறகு மா விளக்கில் திரியை வைத்து அதில் தீ வைத்து தீயுடன் வாயில்போட்டு விழுங்குகின்றனர். இதை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் தீயோடு விழுங்குவது பார்ப்பவர்களை பரவசமடையச் செய்தது. இதுகுறித்து புள்ளான்விடுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் செட்டியார் கூறியதாவது: ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பிள்ளையார் நோன்பு விழா கொண்டாடுவார்கள். கோவிலில் கொண்டாடப்படுவது இல்லை. வீட்டில் வைத்து வணங்கும் விநாயகருக்கு இந்த விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி திரிப்பழம் (தீயுடன் சாப்பிடும் மா விளக்கு) சாப்பிட்டால் அவர்களுக்கு ஆண் வாரிசுகள் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு அவர் கூறினார்.