பதிவு செய்த நாள்
11
டிச
2013
06:12
சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், இலவசமாக, ஆன்-லைனில் முன் பதிவு செய்யும் முறையை, புதுவையில் உள்ள அய்யப்பா சேவா சங்கத்தின், செயலராக உள்ள நாகராஜன் கூறும் போது, கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோயிலில், கார்த்திகை மாதம், 1ம் தேதி முதல், மார்கழி மாதம், 15ம் தேதி வரை, 60 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.
அச்சமயத்தில் அய்யப்ப சாமியை தரிசனம் செய்ய, தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவதால், 7.00 முதல், 12.00 மணி நேரம் வரை, நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இதைத் தவிர்க்க, கேரள மாநில போலீசார், வர்சுவல் கியூ என்ற இலவச, ஆன்-லைன் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
இதற்கு, http://www.sabarimalaq.com என்ற இணையதளத்தில், பக்தர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின், அய்யப்பசாமியை தரிசிக்க விரும்பும் தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்யலாம்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், பக்தர்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தில், வர்சுவல் கியூ முன்பதிவிற்கு இடமிருந்தால், பக்தர்கள் தேர்வு செய்த நேரத்திலேயே சுவாமியை தரிசிக்கலாம்.
அப்படி அமையாத பட்சத்தில், ஆன்-லைன் முன்பதிவில் உள்ள காலண்டரில், யாரும் முன்பதிவு செய்யாத பச்சை நிறத்தில் உள்ள தேதியில், முன்பதிவு செய்யலாம். தேதியை தேர்வு செய்த பின், எந்த நேரத்தில் சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பதை, டைம் ஸ்லாட் மூலம் உறுதிபடுத்தி முன்பதிவு செய்யலாம்.
வர்சுவல் கியூ திட்டம் மூலம், அதிகாலை, 4.00 மணி முதல், இரவு, 11.45 மணி வரை, அய்யப்பசாமியை தரிசிக்கலாம். முன்பதிவு செய்தபின், அதற்கான கூப்பனை, பிரின்ட் அவுட் எடுக்க வேண்டும். மேலும், முன்பதிவு செய்த பக்தர்களின், இ-மெயில் மற்றும் மொபைலுக்கு, முன்பதிவு செய்யப்பட்ட கூப்பன் எண் அனுப்பப்படும்.
சபரிமலை கோயில் பற்றி, அவரவர் தாய்மொழியில் அறிந்து கொள்ள. 70 மொழிகளில், http://www.sabarimalaayyappa.com என்ற இணையதளமும் துவங்கப்பட்டுள்ளது.