பதிவு செய்த நாள்
12
டிச
2013
10:12
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் டிச.,16 முதல் ஜன., 14 வரை சிறப்பாக நடக்கவுள்ளது. இணை கமிஷனர் பொ.ஜெயராமன்: கோயிலில் தனூர் (மார்கழி) மாதத்தை முன்னிட்டு, அதிகாலையில் சேவார்த்திகளுக்கு திருஞானசம்பந்தர் சன்னதி முன் வழக்கம்போல் திருஞானப்பால் வழங்கப்படவுள்ளது. கோயிலின் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலையில் 3.30 மணிக்கு திறக்கப்பட்டு, உச்சிகால பூஜை முடிந்து பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். பின், மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி பூஜை ஆரம்பமாகி இரவு 9.30 மணிக்குள் பூஜைகள் முடிந்தவுடன் கோயில் நடைசாத்தப்படும். மார்கழியை முன்னிட்டு டிச.,16 முதல் 2014 ஜன., 14 வரை திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் சிறப்பாக நடக்கவுள்ளது. மார்கழியில் வரும் தேய்பிறை அஷ்டமி திதியே அஷ்டமி பிரதட்சணம். அந்நாளில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளிவீதிகளில் உலாவருவர். அம்மன் எழுந்தருளும் தேரினை பெண்கள் வடம் பிடித்து இழுத்து வருவர். அஷ்டமி பிரதட்சணம் (டிச.,25) அன்று மாலை 5 மணிக்கு சுவாமி சப்பரங்கள் கோயிலில் இருந்து புறப்பாடாகி யானைக்கல், வடக்குவெளிவீதி, கீழவெளிவீதி, தெற்குவெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை வழியாக மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட்வீதி, காமராஜர்சாலை, விளக்குத்தூண் வழியாக கீழமாசிவீதி தேரடி வரும்.