பதிவு செய்த நாள்
12
டிச
2013
10:12
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில், ஆருத்ரா தரிசன விழாவில், நடராஜர் தேரை இயக்க, பொதுப்பணி துறையினர் அனுமதி மறுத்ததால், தோரோட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ர தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சனம், வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விழாக்களில் தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது. ஆறு மாதங்களுக்கு முன் நடந்த, ஆனி திருமஞ்சன விழாவின் போது, நடராஜர் மற்றும் சிவகாமியம்மன் தேர்கள் பழுதடைந்தன. அப்போதே, இரு தேர்களும் ஓட, பொதுப்பணித் துறையினர், அனுமதி மறுத்தனர். அதன் பிறகு, நடராஜர் தேர் மட்டும் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு ஓடியது. சிவகாமியம்மன் தேர், பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ஆருத்ரா தரிசன விழா துவங்கியும், இதுவரை நடராஜர் தேர் பழுது பார்க்கப்படாமல் உள்ளது. "தேரை சரி செய்தால் தான் ஓட அனுமதிக்க முடியும் எனக் கூறி, தேரை இயக்குவதற்கான, சான்றிதழ் அளிக்க பொதுப்பணி துறையினர் மறுத்து விட்டனர். இதனால், தேரோட்டம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொது தீட்சிதர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், கலெக்டர் மற்றும் சிதம்பரம் சப் கலெக்டரிடம் முறையிட்டனர். பொதுப்பணி துறை செயல் அதிகாரிகள், நேற்று மீண்டும், நடராஜனர் தேரை ஆய்வு செய்து, "தேர் சக்கரத்தை சரி செய்தால் மட்டுமே, தேரை இயக்க முடியும் என்றனர். தீட்சிதர்கள், மூன்று நாட்கள் அவகாம் கேட்கவே, சரி செய்த பிறகு, பார்வையிட்டு சான்றிதழ் அளிப்பதாக, அதிகாரிகள் கூறிச் சென்றனர். இதனால், ஆருத்ர தரிசனத்தில் நடராஜர் தேர் இயங்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.