பிரம்மமுனி: பிரம்மமுனி 18 சித்தர்களில் ஒருவர். இவரது பெற்றோர் மீன் வியாபாரம் செய்துவந்தனர். இவருக்கு பிரம்மனைப் போல படைப்புத்தொழிலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்காக யாகம் செய்தார். அந்த யாக குண்டத்திலிருந்து தோன்றிய இரண்டு பெண்கள் தங்களை திருமணம் செய்துகொள்ளும்படி முனிவரை வற்புறுத்தினர். முனிவர் கோபத்துடன் அவர்களை சபிக்க முயலும்போது, யாககுண்டத்திலிருந்த அக்னிதேவனும் வருணனும் தாங்கள் அந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறினர். இதற்கு சம்மதிக்காத முனிவர் கோபத்துடன் கமண்டல நீரை அந்தப் பெண்கள் மீது தெளித்தார். அவர்கள் இரண்டு செடிகளாக மாறிவிட்டனர். முனிவரின் நண்பரான கோரக்கர் இதில் ஒரு செடியை எடுத்துக்கொண்டார். பிரம்மமுனி ஒரு செடியை வைத்துக்கொண்டார். போதையைத் தரும் இந்த செடிகள் கற்ப மூலிகைகள் எனப்பட்டன.
சட்டைமுனி: சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தர் பல ஊர்களுக்கும் சென்றுவரும்போது, ஸ்ரீரங்கம் கோபுரத்தின் கலசங்கள் கண்ணில் பட்டன. கோயிலை நோக்கி அவர் வேகமாக நடந்துவந்தும், ஜாம பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டுவிட்டது. அவர் ஏமாற்றத்துடன் வாசலில் நின்று அரங்கா... அரங்கா... அரங்கா என மூன்று முறை கூறினார். உடனே கோயில் மணிகள் ஒலித்தது. கதவுகள் தானாக திறந்தன. மக்கள் திரண்டு ஓடிவந்தனர். சட்டைமுனி அரங்கன் அருகில் அமர்ந்திருந்தார். ரங்கநாதர் அணிந்திருந்த சங்கு சக்கரங்கள் சட்டைமுனியின் மேல் இருந்தன. அவரை கள்வன் என நினைத்த அர்ச்சகர்கள் ஆபரணங்களை பறித்தனர். சட்டைமுனியை அரசனிடம் கொண்டு நிறுத்தினர். மன்னர் வியப்படைந்து மீண்டும் அவரை கோயிலுக்கு அழைத்து செல்லும்படி கூறினார். அப்போதும் வாசலில் நின்றபடி அரங்கா... அரங்கா என மூன்று முறை கூறினார் சட்டைமுனி. உடனே கோயில் மணிகள் ஒலித்து நடை திறந்தது. ஆபரணங்கள் மீண்டும் சட்டைமுனியின் மீது தானாக வந்து அமர்ந்தன. சட்டைமுனி அங்கேயே தங்கியிருந்து இறைவன் பாதமடைந்தார். மச்சமுனி: பிண்ணாக்கீசர் என்பவரின் வளர்ப்புமகன் மச்சமுனி. 18 சித்தர்களில் ஒருவர். கால ஞானம் பற்றி உமாதேவியாருக்கு சதாசிவமான சிவபெருமான் உபதேசித்த காலத்தில், அதன்மீது கவனம் செலுத்தாமல் உமாதேவி உறங்கிவிட்டார். அப்போது ஒரு மீன், இறைவன் சொன்ன கருத்துகளை கேட்டுக்கொண்டிருந்தது. அந்த மீனை முனிவராக சிவபெருமான் பிறக்கச்செய்தார். அதுவே மச்ச முனிவர் ஆயிற்று. இவர் பெருநூல் காவியம் என்ற நூலை எழுதியுள்ளார். கலைக்கோட்டு முனிவர்: ரிஷ்யசிருங்கரை கலைக்கோட்டு முனிவர் என்பார்கள். இவரது தலையில் மான்கொம்பு இருக்கும். காட்டில் மட்டுமே வசிப்பார். இவரது காலடிபட்டால் மழைபெய்யும். உரோமபாதன் என்ற அரசன் தன் நாட்டிற்கு அவரை வரவழைத்து மழை பெய்யச் செய்தான். தன் மகளைத் திருமணம் செய்துகொடுத்தான். புத்திர யோகம் இல்லாத தசரதனுக்கு புத்திரகாமேஷ்டி யாகம் செய்துவைத்து, ராமன் முதலான நான்கு மகன்களை பெற உதவினார் கலைக்கோட்டு முனிவர். இவர் எழுதிய தாகக்கலைக்கோட்டார் பிரம்மஞானம் 32 என்ற பகுதி யோகஞான சாஸ்திர திரட்டு என்ற புத்தகத்தில் உள்ளது.
பாம்பாட்டி சித்தர்: பாம்புகளை பிடித்து, படமெடுத்து ஆடச்செய்து வேடிக்கை காட்டும் தொழிலை செய்தவர் பாம்பாட்டி சித்தர். எவ்வளவு பெரிய விஷப்பாம்பையும் பிடித்து விஷத்தை கக்கவைத்து சாதாரண பாம்புபோல ஆக்கிவிடுவார். விஷத்தை முறிக்கும் மூலிகைகள் பற்றி நன்கு அறிந்தவர். மருதமலையில் இவர் விஷ வைத்திய ஆய்வுக்கூடம் நடத்தியதாக சொல்லப்படுவதுண்டு. ஒருமுறை மிகப்பெரிய நவரத்தின பாம்பு ஒன்றை பிடிக்க மலைக்கு சென்றார். அங்கு சட்டை முனிவரை கண்டார். சட்டைமுனி பாம்பாட்டி சித்தருக்கு உபதேசம் செய்தார். உபதேசம் பெற்ற பாம்பாட்டி, சித்தராகிவிட்டார். இவர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் பாம்பாட்டி சித்தர் பாடல், சித்தராரூடம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.