மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வருவதாலும், எங்கு பார்த்தாலும் இயற்கை எழில் கொஞ்சுவதாலும் சிக்கமகளூரு, ‘மலைநாடு மாவட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன. சுற்றுலாவுக்கு மட்டுமின்றி, ஆன்மிகத்திற்கும் இம்மாவட்டம் பெயர் பெற்றது. சிருங்கேரி சாரதாம்பா உட்பட பல முக்கிய கோவில்கள் உள்ளன. ஆனால், அதிகம் அறியப்படாத கோவில்களில் ஒன்றாக அழகிய விநாயகர் கோவில் உள்ளது. கொப்பா டவுனில் இருந்து நான்கு கி.மீ., துாரத்தில் கேசவே என்ற கிராமம் உள்ளது. இங்கு சஹயாத்ரி மலை அடிவாரத்தில் கமண்டல விநாயகர் கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 763 மீட்டர் உயரத்தில் இருக்கும் கோவிலை சுற்றி இயற்கை எழில் கொஞ்சுகிறது. இக்கோவில் 1,000 ஆண்டுகள் பழமையானது என்று வரலாறு கூறுகிறது.
சனி கிரகத்தின் பிடியில், பார்வதி தேவி துன்பத்தை அனுபவித்த போது, அதிலிருந்து தன்னை விடுவித்து கொள்வதற்காக பூலோகம் வந்தததாகவும், கோவில் அமைந்து உள்ள இடத்தில் முதலில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டதாகவும், பார்வதி தேவியின் முடிவால் மகிழ்ச்சி அடைந்த பிரம்மா, சிலை வைத்து வழிபட்ட இடத்திலேயே தோன்றி, பார்வதி தேவியை ஆசிர்வதிக்கும் வகையில், அவர் மீது சிறிது தண்ணீர் தெளித்ததாகவும் கூறப்படுகிறது. இதன்பின், விநாயகர் சிலை முன், சிறிய சதுர கல் மேடை தானாக உருவாகி, அதிலிருந்து தண்ணீர் வர ஆரம்பித்து உள்ளது. இதுவரை அந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கருவறையில் உற்பத்தியாகும் புனித நீர் அங்கிருந்து வெளியேறி கோவில் முன் உள்ள குளத்தில் தீர்த்தமாக கலக்கிறது. இங்கு நீராடி, புனித நீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்து சென்றால் சனி தோஷம் நீங்கும்; சரியான கல்வி கற்காத குழந்தைகள் புனித நீரை, 21 நாட்கள் உட்கொள்வதன் மூலம் வெற்றி பெறுவர் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
கோவிலின் நடை தினமும் காலை, 7:30 முதல் 12:00 மணி வரையே திறந்திருக்கும். பூஜை செய்த பின் நடை சாத்தப்படும்.
பெங்களூரில் இருந்து கேசவே கிராமம் 331 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து கொப்பாவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் உள்ளன. கொப்பா சென்ற பின் அங்கிருந்து ஆட்டோ மூலம் கோவிலுக்கு செல்லலாம். ரயிலில் சென்றால் ஷிவமொக்கா அல்லது பத்ராவதி ரயில் நிலையங்களில் இறங்கி, 70 கி.மீ., துாரம் பயணம் செய்து, கோவிலுக்கு செல்ல வேண்டும்.