பதிவு செய்த நாள்
13
ஜன
2026
01:01
சிக்கபல்லாபூரில் இருந்து நான்கு கி.மீ., துாரத்தில் உள்ளது திப்பேனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில், ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலை பக்தர்கள் ரங்கஸ்தலா என்றே அழைக்கின்றனர். ராவணனை வீழ்த்தி அயோத்திக்கு திரும்பிய பின், ராமருக்கு மன்னராக பட்டாபிஷேகம் நடந்தது. அதில், ராவணனின் சகோதரரான விபீஷணன் பங்கேற்றார்.
சீதையை இலங்கையில் இருந்து மீட்டு வர, விபீஷணன் செய்த உதவிக்காக ரங்கநாதரின் சிலையை, ஒரு மூங்கில் கூடையில் வைத்து இலங்கைக்கு எடுத்துச் செல்லும்படி பரிசளித்தார் ராமர். ராமரின் உன்னதமான செயலை நினைவு கூறும் வகையில், ஏழு முனிவர்கள், ரங்கநாதரின் சிலையை திப்பேனஹள்ளி கிராமத்தில் நிறுவி வழிபட துவங்கினர். பிற்காலத்தில் ஹொய்சாளா ஆட்சியாளர்கள் காலத்தில் அங்கு கோவில் கட்டப்பட்டது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலுக்கு சென்று விட்டு, இந்தக் கோவிலுக்கு சென்றால் மோட்சம் அடைவர் என்பது ஐதீகம். அதனால், இந்த கோவிலை மோட்ச ரங்கநாதர் கோவில் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். கோவிலில் மூங்கில் கூடை போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள சன்னதியில், நான்கரை அடி நீளத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நிலையில், சயன நிலையில் ரங்கநாதர், தனது துணைவியர்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மகர சங்கராந்தி அன்று இந்த கோவிலில், ரங்கநாதர் பாதங்களில் சூரிய ஒளிபடும் நிகழ்வை காணலாம். இக்கோவிலில் ராமானுஜர், சக்கரத்தாழ்வார், வேதாந்த தேசிகன் போன்ற வைணவ துறவிகளின் சன்னதியும் உள்ளது. மகிஷாசுரமர்த்தினி, சதுர் புஜவிஷ்ணு, கிருஷ்ணர், ஹனுமன், கருடர் ஆகியோரின் சிற்பங்களும் பக்தர்களை வெகுவாக கவர்கின்றன. கோவிலில் புனித நீரை தாங்கும் சங்க தீர்த்தம், சக்கர தீர்த்தம் உள்ளன.
இந்த கோவிலின் நடை திங்கள் முதல் வெள்ளி வரை காலை, 8:00 முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை, 4:00 முதல் இரவு 7:00 மணி வரையும் திறந்திருக்கும். சனி, ஞாயிற்றுகிழமைகளில் காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 4:00 முதல் இரவு 8:00 பணி வரையும் திறந்திருக்கும்.
பெங்களூரில் இருந்து சிக்கபல்லாபூர், 66 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் சேவையும் உள்ளது. ரயிலில் சென்றால் சிக்கபல்லாபூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கோவிலை சென்றடையலாம்.