பதிவு செய்த நாள்
13
ஜன
2026
01:01
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான வழிபாடுகளும் உண்டு. அப்படித்தான், ஷிவமொக்கா மாவட்டத்திலும் விசித்திரமான ஒரு வழிபாடு காலங்காலமாக நடந்து வருகிறது. ஷிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுரா தாலுகாவில் உள்ளது ஷீரஹள்ளி கிராமம். இக்கிராமத்தில் ஆண்டு தோறும் ஒரு இரவு, அனைவரும் ஊரை விட்டு வெளியே சென்று, சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்.
அதாவது, கிராமத்தின் ஏழு தேவதைகள் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். திருவிழா முடிந்த பின், தேவதைகளை வழியனுப்பும் சம்பிரதாயம் நடக்கும். குறிப்பிட்ட நாளன்று மாலையே, கிராமத்தில் உள்ள அனைவரும் ஊருக்கு வெளியே செல்வர். நோயாளிகள் மற்றும் நடக்க முடியாதவர்களுக்கு விதி விலக்கு உண்டு. ஆனால், மற்றவர்கள் கட்டாயமாக ஊருக்கு வெளியே வர வேண்டும். அவரவர் தங்களின் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பூஜை பொருட்களை கொண்டு வருவர். பூஜைக்காக கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் நிதி வசூலிக்கப்படும்.
கிராமத்தின் பெரியவர்கள், தேவதைகளை பூஜைகள் செய்வர். மற்றவர்கள் இதில் பங்கேற்பர். அவர்களுக்காக அங்கு உணவு தயாராகும். அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவர். அதன்பின், கிராமத்தின் இளைஞர்கள், ஏழு தேவதைகளை தங்கள் ஊரில் இருந்து மற்றொரு ஊரின் எல்லை வரை சென்று விட்டு விட்டு திரும்புவர். ஏழு தேவதைகளை பூஜிப்பதாலும், எல்லையை தாண்டி விட்டு வருவதாலும், கிராமத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை இருக்கும் என்பது, மக்களின் நம்பிக்கை. கிராம மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் வராது.
தீய சக்திகள், தொற்று நோய்கள் வெளியேறும். மக்கள் ஆரோக்கியமாக இருப்பதாக ஐதீகம். எனவே, காலங்காலமாக இந்த வழிபாட்டை செய்கின்றனர். நேற்று முன்தினமும் இந்த வழிபாடு நடத்தப்பட்டது.
கிராமத்தினர் கூறியதாவது: தேவதைகளை ஊரின் எல்லையை தாண்ட வைக்கும் வழிபாட்டை, காலங்காலமாக எங்கள் முன்னோர்கள் செய்து வந்தனர். அதன்படி நாங்கள் நடந்து கொள்கிறோம். பூஜைக்காக வீடுகளில் பணம் வசூலிப்போம். இந்த பணத்தில் இருந்தே உணவு சமைக்கப்படும்.
ஊரின் நன்மைக்காக இந்த வழிபாட்டை நாங்கள், ஆண்டு தோறும் தவறாமல் கடைப்பிடிக்கிறோம். இதனால், நாங்கள் நோய், நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறோம். ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளுக்கும் எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. தேவதைகளை வழியனுப்பும் போது, நாங்கள் யாரும் ஊரில் இருக்க மாட்டோம். ஊருக்கு வெளியே ஒரு நாள் இரவு தங்குவோம். மறுநாள் காலை வீடு திரும்புவோம். எங்கள் கிராமத்தினர் வெளியூர்களில் இருந்தாலும், பூஜை நாளன்று ஊருக்கு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.