பதிவு செய்த நாள்
14
டிச
2013
11:12
தக்கலை: வேளிமலை முருகனுக்கு அரோகரா எனும் முருக பக்தர்களின் விண்ணை முட்டும் முழக்கத்துடன், பறக்கும் காவடிகள் உட்பட பல்@வறு காவடிகளுடன் குமாரகோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையன்று குமாரகோவில் வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு விதவிதமான காவடிகளுடன், பக்தர்கள் விரதமிருந்து "வேளிமலை முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் காவடி எடுத்து ஊர்வலமாக செல்வது வழக்கம். இந்த ஆண்டின் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று முருக பக்தர்கள் காவடியுடன் குமாரகோவிலுக்கு சென்றனர்.போலீஸ் காவடிபண்டைய திருவிதாங்கூர் மன்னராட்சி காலத்தில், குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழ வேண்டி, தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, குமாரகோவிலுக்கு புஷ்ப காவடி எடுத்து சென்றனர். அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும்குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் போலீசார், தக்கலை போலீஸ் ஸ்டேஷன் வந்து, புஷ்ப காவடி எடுத்து செல்கின்றனர். அதுபோல் நேற்று காலை போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு புஷ்ப காவடிகள் பூஜை செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தக்கலை டி.எஸ்.பி., மோகன்தாஸ், ஆர்.டி.ஓ., அருண் சத்யா, பத்மனாபபுரம் நகராட்சி சேர்மன் சத்யா தேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரத்லிங்கம், வேலம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பால்குடத்துடன் யானை முன்செல்ல, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் காவடி ஆடியபடி பஸ் ஸ்டாண்ட், மேட்டுக்கடை, பெருமாள்கோயில் வழியாக கோர்ட் வளாகத்தை அடைந்தனர். அங்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி சுதாகர், கூடுதல் உரிமையியல் நீதிபதி ஜீவ பாண்டியன், அரசு வக்கீல் செல்வராஜன் வரவேற்பளித்தனர். அதுபோல், பழைய பஸ் ஸ்டாண்டில் அ.தி.மு.க., சார்பில் பத்மனாபபுரம் நகர செயலாளர் ஜகபர் சாதிக் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் காவடி ஊர்வலம் குமாரகோவில் நோக்கி ஊர்வலமாக சென்றது. பொதுப்பணித்துறை காவடிமழை வளம் பெருகி, விவசாயம் செழிக்க, பொதுப்பணித்துறையினர் ஆண்டு@தாறும் காவடி எடுத்து வருகின்றனர். அதையொட்டி இந்த ஆண்டும் பொதுப்பணித்துறையின் அலுவலகத்தில் இருந்து பால்குடத்துடன் யானை முன் செல்ல, இரண்டு காவடிகள் குமாரகோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. நிகழ்ச்சியில், அத்துறையின் உதவி செயல் இன்ஜினியர் அனிட்டா சாந்தி, உதவி இன்ஜினியர் கதிரவன், பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும், வெட்டிக்கோணம், காரவிளை, மேலபரைக்கோடு, பத்மனாபபுரம், பாரதிநகர், மணலி, பிரம்மபுரம், புலியூர்குறிச்சி, தோப்பு, தென்கரை, குமாரகோவில், மணக்கரை, கொல்லன்விளை, முட்டைக்காடு, வழிக்கலம்பாடு, பூவங்காபறம்பு, திருவிடைக்கோடு, குலசேகரம், இரணியல்கோணம், ஆழ்வர்கோவில் மற்றும் சுற்று வட்டாரங்களை @சர்ந்த பக்தர்கள் விரதமிருந்து பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்ப காவடி, வேல் காவடி, சூரிய காவடி, தொட்டில் காவடி, பறக்கும் காவடி என விதவிதமான காவடிகள் எடுத்து சென்றனர். மேலபரைக்கோட்டில் இருந்து முருக பக்தரான கணேஷ் என்பவர் 22 அடி வேல் அலகில் குத்தியபடி குமாரகோவிலுக்கு சென்றார். குமாரகோவிலில் நேற்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம், 5.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 6 மணிக்கு உஷ பூஜை, மதியம் 12.30க்கு அனைத்து காவடிகளும் கோவிலை வந்தடைந்த பின், பக்தர்கள் கொண்டு வந்த பால், பன்னீர், களபம், இளநீர், தேன், நெய், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம், மதியம் 1.30க்கு சிறப்பு தீபாராதனை, அன்னதானம் நடந்தது. குமாரகோவிலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் காவடிகளுடன் ஊர்வலமாக வந்ததால்குமாரகோவில் ஜங்ஷனில் இருந்து கோவிலுக்கு செல்லும் ரோட்டில் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். காவடி ஊர்வலத்தால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும், அவற்றை ஒழுங்கும் படுத்தும் பணியில் தக்கலை போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.