திருநெல்வேலி: அச்சன்கோயில் ஆபரணப்பெட்டிக்கு செங்கோட்டை, தென்காசியில் வரவேற்பளிக்கப்பட்டது. கேரள மாநிலம் அச்சன்கோயிலில் உள்ள ஐயப்ப கோயிலின் சுவாமி ஆபரணங்கள், தங்க, வைர நகைகள், பாதுகாப்பு கருதி, புனலூர் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் உற்சவ திருவிழாவின் போது சுவாமிக்கு அணிவிப்பதற்காக போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வருவது வழக்கம். அச்சன்கோயிலில் உற்சவ விழா இன்று (டிச 16) மார்கழி முதல் தேதியன்று காலையில், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிச 24ல் தேரோட்டம், 25ல் ஆராட்டுவிழா, 26ல் மகோத்சவ விழா நடக்கின்றன. புனலூரில் இருந்து அச்சன்கோயிலுக்கு ஆபரணப்பெட்டியை கொண்டு செல்லும் வழியில் செங்கோட்டை மற்றும் தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயில் முன்பாக வரவேற்பளித்தனர். பின்னர் பண்பொழி, மேக்கரை வழியாக கேரள மாநிலம் அச்சன்கோயில் சென்றது. ஆபரணப்பெட்டிக்கு கேரள, தமிழக போலீசார் பாதுகாப்பளித்தனர்.