பதிவு செய்த நாள்
17
டிச
2013
10:12
திருப்பதி: புத்தாண்டு தினத்தில், திருமலை ஏழுமலையானை தரிசிக்க, தர்ம தரிசன பக்தர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படும், என, திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஜன., 1ம் தேதி புத்தாண்டு தினம், 11ம் தேதி, வைகுண்ட ஏகாதசி, 12ம் தேதி, துவாதசி தினம் ஆகிய, மூன்று நாட்களில், திருமலை ஏழுமலையானை தரிசிக்கும் வழிமுறைகள் குறித்து, தேவஸ்தான செயல் இணை அதிகாரி, சீனிவாசராஜு தெரிவித்ததாவது: திருமலையில், ஜன., 1ம் தேதி மற்றும் 11ம் தேதி அன்று, வி.ஐ.பி.,க்கள், நள்ளிரவு, 1:00 மணிக்கு பிறகே, தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஒரு வி.ஐ.பி.,யுடன், ஆறு பேர் மட்டுமே தரிசனத்திற்கு, அனுமதிக்கப்படுவர். டிச., 31ம் தேதி மற்றும் ஜன., 1ம் தேதி, தர்ம தரிசன பக்தர்கள், மாலை, 5:00 மணிக்கு பிறகே, எம்.பி.சி., 26 அருகில் உள்ள வரிசையில், மறுநாள் தரிசனத்திற்கு, அனுமதிக்கப்படுவர். அந்த வகையில், ஜன., 1ம் தேதி, 20 ஆயிரம் பேரும், ஜன., 11ம் தேதி, 22 ஆயிரம் பேரும், ஏழுமலையானை தரிசிக்கலாம். திருப்பதி, அலிபிரியில் இருந்து வரும், பாதயாத்திரை பக்தர்கள், டிச., 31, நள்ளிரவுக்கு பிறகும், வைகுண்ட ஏகாதசி அன்று மதியம், 2:00 மணிக்கும், நாராயணகிரி நந்தவனத்தில் உள்ள வரிசையில், தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். மேலும், ஸ்ரீவாரிமெட்டு மார்க்கத்தில் வரும் பாத யாத்திரை பக்தர்கள், இந்த, இரண்டு நாட்களும் காலை, 6:00 மணிக்கே, வரிசையில் அனுமதிக்கப்படுவர். பாத யாத்திரை பக்தர்கள், 25 ஆயிரம் பேருக்கு ஜன., 1ம் தேதியும், 30 ஆயிரம் பேருக்கு, ஜன., 11ம் தேதியும், ஏழுமலையான் தரிசனம் அளிக்கப்படும். ஜன., 1ம் தேதி தரிசனத்திற்காக, 50 ரூபாய் டிக்கெட்டுகள் 4,800 முன்பதிவு மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. ஜன., 11ம் தேதி, 50 ரூபாய் சுதர்சன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது. 300 ரூபாய் விரைவு தரிசனம், இந்த, இரண்டு நாட்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜன., 12ம் தேதி, 300 ரூபாய் தரிசனத்திற்காக, 5,000 டிக்கெட்டுகள் மட்டும் வழங்கப்படும். வயோதிகர், மாற்றுத்திறனாளி, கைக்குழந்தையின் பெற்றோருக்கான தரிசனம், ஆர்ஜித சேவைகள் இந்த, மூன்று நாட்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.