பதிவு செய்த நாள்
18
டிச
2013
10:12
சபரிமலை: நேற்று முன்தினம் மறைந்த, திருவிதாங்கூர் மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா, சபரிமலையில் எடுத்த, பழங்கால போட்டோ தற்போது கிடைத்துள்ளது. மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா, டி., 16 ல் காலமானார். இவர், அறக்காவலராக இருந்த போது தான், பத்மநாபசுவாமி கோயிலின் பாதாள அறையில், கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் எடுக்கப்பட்டது. அப்போது அவர், "அவை சுவாமியின் சொத்து. பத்மநாபசுவாமி கோயிலுக்கு சென்று விட்டு வரும் போது, காலில் ஒட்டியிருக்கும் மண்ணைக் கூட கழுவிவிட்டுதான் வீட்டுக்கு வருவேன், என்றார். கடந்த 1939 ல், முதன் முறையாக உத்திராடம் திருநாள், சபரிமலை சென்றார். மீண்டும் 1942 ல், சகோதரர் சித்திரைத் திருநாள், தாய் சேதுபார்வதியுடன் சென்றார். அப்போது, பம்பைக்கு ரோடு கிடையாது. திருவனந்தபுரத்தில் இருந்து காரில் பீர்மேடு, வண்டிப்பெரியாறு சென்று, அங்கிருந்து 14 மைல் தூரம் நடந்து கோயிலுக்கு சென்றனர். "அன்று கோயிலில் கொடிமரம் கிடையாது. நாங்கள் வணங்கியது, இன்று காணும் ஐயப்பன் விக்ரகத்தை அல்ல; உக்ரமூர்த்தியான சாஸ்தா விக்ரகத்தை கும்பிட்டோம் என, மார்த்தாண்டவர்மா, தனது குறிப்பில் எழுதியுள்ளார். அப்போது, உத்திராடம் திருநாள், "ரோளி பிளக்ஸ் கேமராவில் சபரிமலையை போட்டோ எடுத்துள்ளார். கடந்த 1950 வைகாசி 4 ல், சபரிமலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, கோயில் தீக்கிரையானது. பின், திருவிதாங்கூர் அரண்மனை தேவாரப்புரையில் இருந்த ஐயப்ப விக்ரகத்தின் மாதிரி எடுத்துதான், தற்போதைய சபரிமலை விக்ரகம் செய்யப்பட்டது.