பதிவு செய்த நாள்
18
டிச
2013
11:12
மதுரை: இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா கப்பல் பயணிகள், நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகாலை கண்டு ரசித்தனர். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 364 பயணிகள் "வாயேஜர் சுற்றுலா கப்பலில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். பல்வேறு நாடுகளின் கடற்கரை நகரங்களை கண்டு களித்தவர்கள் இந்தியாவில் போர்பந்தர், கொச்சி, கோவா போன்ற நகரங்களுக்கு சென்று, நேற்று தூத்துக்குடி துறைமுகம் வந்தனர். அவர்களில் 90 பேர், மதுரைக்கு நேற்று அழைத்து வரப்பட்டு மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகாலை காண டிராவல் கிளப் ஏற்பாடுகளை செய்தது. 57 பேர் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் உள்ள போப் நினைவிடம், சர்ச் கல்லூரியை பார்வையிட்டு,தமிழர்களின் பண்பாடுகள் குறித்து வீடியோ, போட்டோக்கள் எடுத்துக்கொண்டனர். மீதமுள்ளவர்கள் தூத்துக்குடி டவுன் பகுதியில் உள்ள பனிமயமாதா சர்ச் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். மதுரைக்கு நேற்று மதியம் 1.45 மணிக்கு மீனாட்சி கோயிலுக்கு வந்த சுற்றுலா பயணிகளை , டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா, செயலாளர் செந்தில்நாதன், நிர்வாகிகள் ஜெயக்குமார், பாரதி, சுந்தர், கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் ஆகியோர் மல்லிகைப் பூ கொடுத்து வரவேற்றனர். நடை மூடப்பட்டிருந்த போதும், அவர்கள் கோயிலுக்குள் செல்ல சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. ஆயிரங்கால் மண்டபம், பொற்றாமரைக்குளம், ஆடி வீதிகளை ஒரு மணி நேரம் அவர்கள் பார்வையிட்டனர். கோயில் சிற்பங்களையும், நான்கு கோபுரங்களையும் ரசித்தனர். மகாலை பார்வையிட்ட பின் தூத்துக்குடி சென்றனர். நேற்று இரவு 8.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு சென்றனர். இலங்கையை சுற்றி பார்த்து விட்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தங்கள் நாடுகளுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே நாளில் மினர்வா நாட்டு சுற்றுலா சொகுசு கப்பலில் சுற்றுலா பயணிகள் தூத்துக்குடிக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது. டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா, ""மதுரை சுற்றுலா மேம்பாடு அடைய வெளிநாட்டு பயணிகள் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு, என்றார். இணை கமிஷனர் ஜெயராமன், ""வெளிநாட்டவர் கோயிலில் பார்வையிடும் இடங்களை மட்டும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். அவர்கள் விருந்தினர் என்பதால், நடை மூடப்பட்ட போதும், சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இது நடைமுறையில் இருப்பது தான். உயர்ந்த கோபுரங்கள், சிற்பங்கள், மேற்புற வர்ண பூச்சுகளை கண்டு வியந்தனர், என்றார்.
எத்தனை அழகு...எத்தனை ஆச்சரியம்:
"அமேஸிங், வொண்டர்புல், வெரிநைஸ். இந்த வார்த்தைகள் மீனாட்சி கோயிலை பார்வையிட்டு திரும்பிய வெளிநாட்டினரிடமிருந்து வெளிவந்தவை. அவர்களுடன் பேசியதிலிருந்து...
மெக்ரே, இங்கிலாந்து: மீனாட்சியம்மன் கோயில் உலக ஆச்சரியம்.
டேனியல், இங்கிலாந்து: இந்த அற்புதத்தை கண்டு வியந்தேன்.
ஜியின், அமெரிக்கா: அமெரிக்கா வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். ஏற்கனவே டில்லி, ஆக்ராவை பார்த்துள்ளேன். இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளேன். மீனாட்சி கோயில் சிற்பங்கள் பார்க்க வியப்பூட்டுகின்றன.
குளோரியஸ், இங்கிலாந்து: 1962ல் இந்தியா வந்தேன். கோயில் ஆச்சரியமூட்டுவதாக உள்ளது. பொற்றாமரை குளம், வானுயர்ந்த கோபுரங்கள், அதை சுற்றி வரும் புறாக்கூட்டம் கண்ணில் இன்னமும் நிழலாடுகின்றன.