பதிவு செய்த நாள்
18
டிச
2013
12:12
சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி பெருந்திருவிழாவில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி திருவிழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் விழாவன்று இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், ஐந்தாம் நாள் விழாவில் கருட தரிசனமும், ஏழாம் நாள் இரவு கைலாச பர்வத வாகன பவனியும் நடந்தது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை 8.10 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட டி.ஆர்.ஓ., பழனிச்சாமி, எஸ்.பி., மணிவண்ணன், சுசீந்திரம் டவுன் பஞ்., தலைவர் முருகேஷ், அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், கோயில் கண்காணிப்பாளர் சோணாச்சலம், ஜீவானந்தம், கோயில் மேலாளர் ஆறுமுகநயினார், கணக்கர் கண்ணன், அ.தி.மு.க. பொறுப்பாளர் ஹேமந்த் தேர்வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.முதலில் வினாயகர் தேரை சிறுவர், சிறுமியரும், சுவாமி தேரை ஆண்களும், அம்மன் தேரை பெண்களும் நான்கு ரதவீதிகள் வழியாக இழுத்து வந்தனர். காலை 11 மணிக்கு தேர் அதன் நிலையை வந்தடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்தனர். மாலையில் சுவாமி மண்டகப்படிக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலையில் ராமசுவாமி, கோமதி திருநாவுக்கரசு சமய சொற்பொழிவும் நடந்தது. இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி பவனி நடந்தது. ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி தம்பதி சமேதராய் எழுந்தருளினர். இரவு 12.15 மணிக்கு தாணுமாலயன் சுவாமி கோயில் முன்பு சிறப்புமிக்க சப்தாவர்ண நிகழ்ச்சி நடந்தது. கோட்டாறு வினாயகர், குமாரகோயில் மற்றும் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் தாய், தந்தையை விட்டு பிரிந்து செல்லும் உருக்கமான சப்தாவர்ண நிகழ்ச்சி நடந்தது.