பதிவு செய்த நாள்
18
டிச
2013
12:12
நாகர்கோவில்: சுவாமி விவேகானந்தர், கன்னியாகுமரியில் உள்ள கடல் பாறைக்கு, நீந்தி சென்றதை நினைவுகூறும் வகையில், நேற்று, 150 இளைஞர்கள் பங்கேற்ற, கடல் நீச்சல் பேரணி நடந்தது. சுவாமி விவேகானந்தர், 1892ல், கன்னியாகுமரி வந்தார். பகவதியம்மனை தரிசித்த பின், அவர், கோவிலின் எதிரே, கடலுக்குள் இருந்த பாறைக்கு நீந்தி சென்றார். அங்கு, 3 நாட்கள் கடும் தவம் மேற்கொண்டார். விவேகானந்தரின், 150வது பிறந்த நாள் விழா, கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரம் சார்பில், ஓராண்டுக்கு கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, அவர் கடலில் நீந்தி சென்றதை நினைவு படுத்தும் வகையில், கன்னியாகுமரி பூம்புகார் படகு துறையில், இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த நீச்சல் வீரர்கள் பங்கேற்ற, கடல் நீச்சல் பேரணி நடந்தது. இதற்கு, வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமம் சுவாமி சைதன்யானந்த மகராஜ் தலைமை வகித்தார். அர்ஜூனா விருது பெற்ற நீச்சல் வீராங்கனை பூலா சவுத்தரி, பேரணியை துவக்கி வைத்தார். விவேகானந்த கேந்திர துணை தலைவர் பாலகிருஷ்ணன், பொது செயலர் பானுதாஸ் உட்பட, பலர் கலந்து கொண்டனர். நீச்சல் வீரர்களுக்கு பாதுகாப்பாக, படகில் பாதுகாப்பு படையினர் சென்றனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், நீச்சல் வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.