லாலாப்பேட்டை: கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகில் கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர், மடப்பள்ளி விநாயகர், முருகன் கோவில் ஆகியவை திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட்டது. இவற்றுக்கு இழப்பீடாக, 11.50 லட்சம் ரூபாய் இந்து சமய அறநிலையத் துறைக்கு நெடுஞ்சாலை துறை வழங்கியது. இதையடுத்து கோவிலில் இடிபட்ட பகுதிகளை கட்டுதற்கு நெடுஞ்சாலை துறை கொடுத்த தொகை போதுமானதாக இல்லை. எனவே, நன்கொடை மூலமாக கோவிலை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் சீரமைக்க பூமிபூஜை நேற்று முன் தினம் நடந்தது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் யுவராஜ் கூறுகையில், ""தற்போது சுற்றுச்சுவர் அமைக்க, 2.90 லட்சம் ரூபாய் செலவில் முதல்கட்ட பணிகள் நடக்கிறது. அதைத் தொடர்ந்து இடிபட்ட அனைத்துக் கோவிலும் புதிதாக அமைக்கப்படும், என்றார். விழாவில், அறக்கட்டளை தலைவர் சுந்தரேசய்யர், நிர்வாகிகள் செல்லமுத்து, சரவணன், ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.