சபரிமலை: பணம் திருட்டு போன விஷயத்தில் போலீசுடன் ஏற்பட்ட மோதலில் திருச்சியை சேர்ந்த பக்தர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்கள் எங்கும் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். திருச்சியை சேர்ந்த பக்தர்கள் குழு ஒன்று எருமேலி வந்தது. இதில் 516 பக்தர்கள் இருந்தனர். இவர்களது குருசாமி வசம் இருந்த பேக்கில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் திருட்டு போனது. பேக்கை யாரோ பிளேடால் கீறி பணத்தை எடுத்துள்ளனர். இதுபற்றி எருமேலி போலீசில் புகார் கொடுத்த தமிழக பக்தர்கள், திருடனை கைது செய்ய கோரி ரோடு மறியலில் ஈடுபட்டனர். ஏற்கெனவே நெரிசல் நிறைந்த எருமேலி ரோட்டில் இவர்களது செயல்பாட்டால் பக்தர்களும் , பொது மக்களும் பாதிக்கப்பட்டனர். திருட்டு போன பணம் தரவேண்டும், அல்லது வேறு ஏதாவது வழியில் பணம் தரப்படும் என்பதை கலெக்டர் நேரில் வந்து உறுதியளிக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்தனர். கலெக்டரிடம் போனில் பேச ஏற்பாடு செய்வதாக கூறிய எருமேலி இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை பக்தர்கள் தாக்க முயன்றதால் நிலைமை மோசமானது. சிலர் தமிழகத்தை கேரளா எல்லா வழியிலும் துரோகிப்பதாக கூறியதால் போலீசார் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டனர். ஐயப்பா சோ சங்கம், ஐயப்பா சேவாசமாஜம் நிர்வாகிகள் பேசியும் சமாதானம் ஏற்படவில்லை. சிலர் கேரள அரசு பஸ்சின் சக்கரத்துக்கடியில் தலை வைத்து படுத்தனர்.
பின்னர் கோட்டயம் எஸ்.பி. தினேஷ், ஆர்.டி.ஓ. மோகன்பிள்ளை ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களுக்கு ஊருக்கு திரும்பி செல்ல தேவையான பணம் தரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஊரில் உள்ள உறவினர்களிடம் முடிந்த அளவு பணத்தை ஆர்.டி.ஓ. வங்கி கணக்கில் செலுத்த தகவல் கொடுக்கும் படியும், அதை சபரிமலை தரிசனம் முடிந்து வரும் போது எருமேலியில் வைத்து தருவதாகவும் கூறப்பட்டது. இதில் போதாத பணத்தை நன்கொடை மூலம் வசூல் செய்து தருவதாக ஐயப்பாசேவாசங்கம் உறுதியளித்ததை தொடர்ந்து பிரச்னை ஓய்ந்தது. இந்த பிரச்னையால் எருமேலியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.