சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசனுக்காக நடை திறந்த பின், 32 நாள் வருமானம் 102 கோடி ரூபாயாக அதிகரித்தது. மண்டல கால பூஜைகள் நவ.,16ம் தேதி தொடங்கியது. 32 நாட்கள் கடந்த நலையில் வருமானம் 102 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இது 82 கோடி ரூபாயாக இருந்தது. அரவணை விற்பனையில் 39 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது 36 கோடி. காணிக்கை 36 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட ஏழு கோடி ரூபாய் அதிகம். அப்பம் விற்பனையில் எட்டு கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது ஆறு கோடி. அறை வாடகை கடந்த ஆண்டு ஒரு கோடி ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டு இரண்டு கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. கேரள ஏ.டி.ஜி.பி., ஹேமச்சந்திரன் சன்னிதானத்தில் முகாமிட்டு மண்டலபூஜை மற்றும் அதன் முந்தைய நாள் செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகள் பற்றி ஆய்வு செய்தார். இந்த இரண்டு நாட்களிலும் வழக்கமான போலீசாருடன் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார். டிச.,22ம் தேதி தங்க அங்கி பவனி புறப்படுகிறது. இந்த பவனி செல்லும் பாதையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பத்தணந்திட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. டிச., 25 மதியம் தங்க அங்கி பவனி பம்பை வந்தடையும். அன்று மாலை 6 மணிக்கு அது சன்னிதானம் வந்தடையும்.