கழுகுமலை: கழுகுமலை கொடிமரத்து பேச்சியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீமிதித்தனர். கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலுடன் இணைந்த கொடிமரத்து பேச்சியம்மன் கோயிலில் 15ம் ஆண்டு பூக்குழி திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 8ந்தேதியன்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கொடிமரத்து பேச்சியம்மனுக்கு சிறப்பு பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் (டிச.16) பூக்குழி திருவிழா நடந்தது. விழாவிற்கு கழுகாசலமூர்த்தி கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன் தலைமை வகித்தார். கழுகுமலை டவுண் பஞ்., தலைவர் சுப்பிரமணியன், பழனி, ராஜேந்திரன், முன்னாள் பஞ்., தலைவர் சங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூக்குழி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூமிதிக்கும் மேடை தயார் செய்யப்பட்டு விறகுகள் அடுக்கப்பட்டு தீமூட்டப்பட்டது. மேலும் தீமிதிக்கு முன்னதாக 21 அக்னிசட்டி ஏந்தி கோயிலை சுற்றி வந்தனர். பேச்சியம்மன் கோயில் அருள்வாக்கு சித்தர் மூக்காண்டி குருசாமி தலைமையில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடந்தது. விழாவில் அய்யப்ப பக்தர்கள் குழு காளி, சுந்தரப்பன், ஆரியங்காவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.