பதிவு செய்த நாள்
19
டிச
2013
10:12
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட்டது. மார்கழியில் வரும் திருவாதிரை நாளை ஆருத்ரா தரிசனம் என கொண்டாடப்படுகிறது. அதன் படி, நேற்று வந்த மார்கழி திருவாதிரை நாள், பொள்ளாச்சி பகுதிகளில் கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், ஜோதிநகர் சிவன் கோவில்,தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் கோவில், ரமணமுதலிபுதூர் மண்கண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.கோவில்களில் நடந்த சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், திருக்கல்யாணம், ஆருத்ரா தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகளில், பொதுமக்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஆருத்ரா தரிசன வழிபாட்டின் இறுதி நிகழ்ச்சியாக, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று மாலை 6:00 மணிக்கு சிவ பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நேற்று திருவாதிரையை ஒட்டி ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நடராஜர் உற்சவமூர்த்தியை வழிபட்டனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நேற்று திருவாதிரையை ஒட்டி, நடராஜர், சிவலோகநாயகி உற்சவ சிலைகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், அனைத்து வகையான கனிகள் மற்றும் 16 வகையான பொருட்களில் அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. பின், இச்சிலைகளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து ஆருத்ரா தரிசனம் காலை 7.30 மணியளவில் தீபராதனை காட்டப்பட்டது. திருவாதிரையை ஒட்டி சுமங்கலி விரதம் இருந்த பெண்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிப்பட்டனர். பின், பக்தர்களுக்கு, மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியகளந்தை ஆதிஸ்வரன் கோவிலிலும் இவ்விழா நடந்தது.