பதிவு செய்த நாள்
19
டிச
2013
11:12
மேட்டுப்பாளையம்: தமிழக அரசின் கோவில் யானைகள் நலவாழ்வு முகாம் மற்றும் வனத்துறை யானைகள் முகாம் என இரு பிரிவுகளாக இன்று துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள கோவில்கள், மடங்கள் மற்றும் வனத்துறை யானைகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில், மேட்டுப்பாளையத்தில் "யானைகள் நலவாழ்வு முகாம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றின் படுகையில் இன்று துவங்குகிறது. இம்முகாமில், கோவில் யானைகள் 43, வனத்துறை யானைகள் 55, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை ஒன்று, நாகூர் தர்கா யானை பாத்திமா என மொத்தம் 100 யானைகள் பங்கேற்கிறது. இதில், நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட விளாமரத்தூரில் வனத்துறைக்கு சொந்தமான யானைகளின் முகாம் நடக்கிறது. இவ்விரு முகாம்களும் நான்கு கி.மீ., இடைவெளியில் நடத்தப்படுகிறது. முகாம் நடக்கும் பகுதியில் யானைகள் தங்குவதற்கும், வாக்கிங் செல்வதற்கும், மூலிகை உணவு தயாரிக்கவும் தனி கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. யானை பாகன்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை, போலீசாருக்கும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளை, தமிழக அறநிலையத்துறை கமிஷனர் தனபால் நேற்று ஆய்வு செய்தார்.
இதன் பின், அவர் கூறியதாவது : கோவில், மடங்கள் மற்றும் வனத்துறை யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையத்தில் நாளை (இன்று) துவங்குகிறது. இம்முகாமிற்கு வரும் யானைகளை கால்நடை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து, லாரியில் பயணம் செய்ய தகுதியாக உள்ளது என சான்று அளித்த பிறகு தான் கொண்டு வருகின்றனர். முகாமில் யானைகளுக்கு நல்ல உணவு, மருத்துவ சிகிச்சை, காலை, மாலையில் நடைபயிற்சி அளிக்கப்படும். அதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன, இவ்வாறு தனபால் கூறினார். தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து நேற்று மாலை கோவில் யானைகள் 20ம், வனத்துறையானைகள் எட்டும் மேட்டுப்பாளையம் முகாமிற்கு வந்தன. இன்று காலை 9.00 மணிக்கு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் , முகாமை துவக்கி வைக்கின்றனர்.