பதிவு செய்த நாள்
20
டிச
2013
10:12
அவிநாசி: ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, கூத்த பிரானுக்கு 108 திரவியங்களில் மகாபிஷேகம் நான்கு மணி நேரம் நடந்தது. கூடிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், "நமசிவாய வாழ்க கோஷமிட்டு, பரவசம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கடந்த 8ம் தேதி காப்புக்கட்டுடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில், திருவெம்பாவை உற்சவம், மாணிக்கவாசகர் வீதியுலா நடந்தது. ஆருத்ரா தரிசன நாளான நேற்று, அதிகாலை 3.00 மணிக்கு மகா அபிஷேகம் துவங்கியது.கூத்த பிரானாகிய நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்மைக்கும், விபூதி, அன்னம், திருமஞ்சனம், சந்தனம், பஞ்சகவ்யம், அருகம்புல், சுக்குப்பொடி, நெல்பொரி, கரும்பு, அன்னாசி, திராட்சை, பன்னீர், ஜவ்வாது, சந்தானாதி தைலம், நெய், சொர்ணம் உள்ளிட்ட 108 வகை பொருட்களில் அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை 3.00 மணிக்கு துவங்கிய அபிஷேகம், காலை 7.00 மணி வரை நடந்தது.சிறப்பு மலர் அலங்காரத்துக்குபின், ரிக், யஜூர், சாம, அதர்வன என நான்கு வேதங்கள், சிவாகமம் ஆகியவற்றை சிவாச்சாரியார்கள் பாராயணம் செய்ய, தேவாரம், திருவெம்பாவையை ஓதுவா மூர்த்திகள் ஓத, மங்கல இசை ஒலிக்க, ஆடல் வல்லானும், அம்மையும், பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். உற்சவமூர்த்திகள், சப்பரத்தில் வைக்கப்பட்டு, கோவில் முன்புள்ள அரச மரத்தில் பட்டி சுற்றப்பட்டு, ரத வீதிகளில் வீதியுலா நடந்தது.மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையை, சிவக்குமார சிவம் தலைமையில், கோவில் சிவாச்சாரியார்கள் மேற்கொண்டனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள், 2.00 மணிக்கே கோவிலில் திரண்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை, காடாம்பாடி ஐநூற்று கொங்கு செட்டிமார் தர்மபரிபாலன சபையினர் மேற்கொண்டனர்.