புது தில்லி ரமண கேந்திரத்தில் ரமண மகரிஷி ஜயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2013 11:12
புது தில்லி லோதி சாலையில் உள்ள ஸ்ரீ ரமண கேந்திரத்தில் ஸ்ரீ ரமண மகரிஷியின் 134-ஆவது ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கேந்திர வளாகத்தில் காலை 8 மணிக்கு ரமணரின் திருவுருவப் படம் முன் மலர்கள் வைத்து பூஜை நடைபெற்றது. வேத பாராயணம், அஷ்டோத்திர அர்ச்சனையும் நடத்தப்பட்டது. ஸ்ரீ ரமணரின் அவதாரப் பெருமை குறித்து ஸ்ரீ பிரபுத்தானந்த சுவாமிகள் எடுத்துரைத்தார். "ஆசைக்கும், பெருமைக்கும் அப்பாற்பட்ட அவதாரம் ரமணருடையது. அவரது அவதாரம் காரண காரியம் கொண்டது. உலகத்திற்கு நன்மை செய்வதற்காக அவதரித்தவர் அவர். இறைவன் நம் மனத்தினுள் குடிகொண்டு இருக்கும்போது ஏன் வெளியில் தேட வேண்டும்? என்று தனது வாழ்க்கையின் மூலம் உணர்த்தியவர் ரமணர். மிகவும் அமைதி பேணப்படும் ரமண கேந்திரத்தில் 5 நிமிடம் கண்மூடி தியானித்தால் அமைதியும், மகிழ்ச்சியும் மனத்தில் ஏற்படுவதை நாம் உணர முடியும் என்றார் பிரபுத்தானந்த சுவாமிகள்.