பதிவு செய்த நாள்
23
டிச
2013
11:12
புதுக்கோட்டை: பிரகதாம்பாள் கோவில் கிரிவல பாதை மற்றும் மங்களாங்குளத்தை சீரமைக்க வலியுறுத்தியும், அங்கு நவீன கழிவறை, குளிக்குமிடம் அமைக்கவும் வலியுறுத்தி, புதுக்கோட்டை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் கார்த்திக் மற்றும் திருக்கோகர்ணம் பொதுமக்கள் சார்பில், புதுக்கோட்டை கலெக்டர் மனோகரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் கோவில், புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில், தொண்டைமான்கள் குலதெய்வமாக வழிபட்ட திருத்தலமாகும். இது கி.பி. ஏழாம் நுற்றாண்டில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் குடவறை கோவிலாக அமைக்கப்பட்டது. இந்த கோவிலில் வெளிநாட்டு, உள்நாட்டு ஆய்வாளர்கள், பழங்காலம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இத்தகைய சிறப்பு கோவிலின் கிரிவல பாதை சரிவர பராமரிக்கப்படாததால், பாழை பழுதடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஆகையால் பக்தர்களின் வசதிக்காகவும், வரலாற்று ஆய்வாளர்களன் ஆய்வுக்காகவும் கிரிவல பாதையை உடனடியாக செப்பனிட வேண்டும். அதேபோல் கோவிலுக்கு அருகேயுள்ள மங்களாங்குளம், சிறப்பு மிக்க தீர்த்தக்குளமாகவும், புதுக்கோட்டை மக்களுக்கு குடிநீர் குளமாகவும் பயன்பாட்டில் இருந்து வந்தது. மன்னர் ஆட்சிக்கு முடிவுக்கு வந்தபின், குளத்தின் பராமரிப்பும் நிறுத்தப்பட்டது. இதனால் குளம் தூர்ந்துபோகும் நிலையில், கழிவு நீர் குட்டைபோல் உள்ளது. ஆகையால் இந்த குளத்தை உடனடியாக சீரமைத்து, அங்குள்ள வற்றாத சுனை மூலம் புதுக்கோட்டை மக்களுக்கு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணலாம். தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற பிரகதாம்பாள் கோவிலுக்கு, தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், மாநிலம் முழுவதும் இருந்து வந்து செல்கின்றனர். இவர்களுக்கு முறையான குளியலறை, கழிப்பிட வசதிகள், கோவில் அருகே இல்லை. ஆகையால் பக்தர்கள் வசதிக்காக ழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளை, கோவில் வளாகம் அருகே மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும். பிரகதாம்பாள் கோவிலில் மேற்கொண்ட வசதிகளை உடனடியாக செய்து, பல நூறு ஆண்டுகள் பெருமை வாய்ந்த கோவிலின் பெருமையை காக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.