பதிவு செய்த நாள்
23
டிச
2013
11:12
திருவள்ளூர்: விவேகானந்தர், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, ரத யாத்திரை, திருவள்ளூரில் துவங்கியது. சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ரத யாத்திரை, கடந்த, ஏப்ரல் மாதம் துவங்கி, 28 மாவட்டங்களில் வலம் வந்தது. தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில், ரதயாத்திரை வலம் வரும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் துவங்கியது. திருவள்ளூர் நகராட்சியில் துவங்கிய யாத்திரையை, வருவாய் துறை அமைச்சர் ரமணா துவக்கி வைத்தார். இதில், ஆட்சியர் வீர ராகவ ராவ், நகராட்சி தலைவர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணி, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் மற்றும் மாவட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.
திருத்தணி: சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ரத யாத்திரை, நேற்று முன்தினம் இரவு, திருத்தணி கமலா தியேட்டர் அருகே வந்தடைந்தது. ரத யாத்திரையை, நகராட்சி தலைவர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். மேலும், தனியார் தொண்டு நிறுவன மகளிர் அமைப்பை சார்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், கையில் விளக்குடன் காத்திருந்து மலர் துாவி வரவேற்றனர். தொடர்ந்து, நேற்று காலை, திருத்தணி முக்கிய வீதிகளில், ரத யாத்திரை ஊர்வலம் வந்தது. இன்று, திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியத்தில் ரத யாத்திரை ஊர்வலம் நடக்கிறது.