பதிவு செய்த நாள்
24
டிச
2013
10:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலை மாசுபடுத்திய, தனியார் விடுதிகளின் கழிவுநீர் குழாய்களை, நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ராமேஸ்வரம் கோயில் நான்கு ரதவீதிகளை சுற்றி, ஏராளமான வீடுகள், விடுதிகள் உள்ளன. இவற்றின் கழிவு நீர், அக்னி தீர்த்த கடலில் கலந்து மாசுபடுத்தியது. சமீபத்தில், தீர்த்தத்தை ஆய்வு செய்த, மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல் குழுவினர், "கழிவு நீரால் அக்னி தீர்த்தம் அசுத்தமாகி, பக்தர்கள் நீராட உகந்ததாக இல்லை என, அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, சன்னதி தெரு, கிழக்கு ரத வீதியில் உள்ள விடுதிகளில் இருந்து, அக்னி தீர்த்த கடலுக்கு செல்லும் கழிவு நீர் குழாய்களை, நகராட்சி கமிஷனர் கண்ணன் தலைமையில், சுகாதார அலுவலர் அய்யப்பன், ஊழியர்கள், நேற்று அகற்றினர். உறுதியான நடவடிக்கை இல்லை:கழிவு நீர் குழாய்களை அகற்றிய ஊழியர்கள், விடுதிகளில் அமைக்கப்பட்ட இணைப்புகளில் சிமென்ட் வைத்து பூசாமல், பழைய துணிகளை கொண்டு அடைத்தனர். இதனால் மீண்டும், கழிவு நீர் கடலில் கலக்க வாய்ப்பு உள்ளது. நகராட்சி கமிஷனர் கண்ணன் கூறியதாவது: அக்னி தீர்த்த கடலில் கழிவு நீரை திறந்து விடும் விடுதிகளுக்கு, முதல் கட்டமாக அபராதம் விதிக்கப்படும். வரம்பு மீறும் விடுதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.