பதிவு செய்த நாள்
25
டிச
2013
11:12
சபரிமலை: கேரள போலீசார் முறையாக திட்டமிடாததால், சபரிமலை பக்தர்கள், காட்டில், 10 மணி நேரமும், மற்ற இடங்களில், 9 மணி நேரமும் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். சபரிமலையில், நாளை மண்டலபூஜை நடக்கிறது. தமிழகத்தில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், குழந்தைகளுடன் ஏராளமானோர், சபரிமலை வருகின்றனர். பக்தர்களின் வாகனங்கள் அதிகமானதால், கேரளாவின், பத்தணந்திட்டை முதல் பம்பை வரை, 10க்கும் மேற்பட்ட இடங்களில், வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். வழக்கமாக, பத்தணந்திட்டையில் இருந்து பம்பைக்கு, 2 மணி நேரத்தில் செல்லலாம்; தற்போது, 10 மணி நேரமாகிறது. கேரள போக்குவரத்துக் கழக பஸ்களையும், போலீசார் தடுத்து நிறுத்துவதால், தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், பம்பையில் இருந்து செல்ல முடியவில்லை. இதேபோல், எருமேலியில் இருந்து பம்பை செல்லும் வாகனங்கள், மூன்று இடங்களில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. பத்தணந்திட்டை - பம்பை ரோட்டில், இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், எருமேலி - பம்பை ரோட்டில், அதற்கு கூட, போலீசார் அனுமதிக்கவில்லை. நேற்று காலை, எருமேலியில் இருந்து புறப்பட்ட வாகனங்கள், நேற்று இரவும், பம்பை வந்து சேரவில்லை. காட்டுக்குள் சிக்கி, பக்தர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். பரிதவித்து வரும் பக்தர்கள், பம்பையில், 3 மணி நேரம் நிறுத்தப்படுகின்றனர்; பின், சபரிபீடம்- மரக்கூட்டத்தில், 2 மணி நேரம் காத்திருக்க வேண்டும்; அடுத்து, சரங்குத்தி முதல் சன்னிதானம் வரை, 4 மணி நேரம் வரை, நிற்க வேண்டும். இப்படி, 19 முதல், 24 மணி நேரம் வரை, காத்திருந்தால் மட்டுமே, 18ம் படியேற முடியும். இவ்வளவு பிரச்னைகளை சந்திக்கும் பக்தர்கள், சன்னிதானம் சென்றால், "சுக தரிசனம் கிடைக்கும்; காரணம், இங்கு, குறைவான பக்தர்களே இருக்கின்றனர். 18ம் படியில், மிகத்தாமதமாக பக்தர்களை அனுமதிப்பதால் தான், இந்நிலை ஏற்பட்டுள்ளது. கேரள போலீசார் சரியாக திட்டமிடாததால், காடுகளில் பரிதவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, பக்தர்கள் புலம்புகின்றனர்.