பதிவு செய்த நாள்
30
டிச
2013
10:12
சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்,வழிபாட்டு தலமாக மட்டு மின்றி, நூலகம், மருத்துவ மனை உள்ளிட்ட வசதிகள் கொண்டதாக இருந்தது. ரங்க நாதர் பெருமாள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இரண்டு நாளைக்கு ஒருமுறை, கஷாயம் படைக்கப்பட்டது, என, மத்திய தொல்லியல் துறையின், முன்னாள் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் பேசினார். தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில், ஸ்ரீரங்கம் கோவில் குறித்த, ஒரு வாரசிறப்பு சொற்பொழிவு, சென்னை யில் உள்ள, பி.எஸ்., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், மத்திய தொல்லியல் துறையின், முன்னாள் துணை கண்காணிப்பாளர், ஸ்ரீதரன், ஸ்ரீரங்கம் கோவில் வாழும் வரலாறு என்ற தலைப்பில், பேசினார்.
பழக்க வழக்கங்கள்: நிகழ்ச்சியில், ஸ்ரீதரன் பேசியதாவது: அக்காலத்தில், மக்களின் அனைத்து பழக்க வழக்கங்களும், கோவில்களை சார்ந்தே அமைந்தன என்பது, கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. கோவில் வழிபாட்டு முறைகளில், எந்தெந்த நாட்களில், இறைவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது; குறிப்பாக, சித்திரை, தை மாத விழாக்கள், எந்த முறையில் நடந்தன என்பது குறித்து, கல்வெட்டுகளில், விரிவாக பார்க்க முடியும். முதலாம் குலோத்துங்க சோழன், மாறவர்மன் சுந்தர பாண்டியன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் போன்ற மன்னர்கள், தாங்கள் பிறந்த நட்சத்திரத்தில், ஸ்ரீரங்கம் கோவிலில், சிறப்பு பூஜை செய்ததை, கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. ஒரு கல்வெட்டில், ஞான சிந்தாமணி பாசுரத்தில் உள்ள பாடல்களை, தினந்தோறும் பாட வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. ஞான சிந்தாமணி பாடல்கள் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும், இது போன்ற வழிபாட்டு முறைகள் இருந்ததை, கல்வெட்டுகள் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
பூஜைக்கு பயன்: படுத்தப்படும் மலர்களை, கோவில் நந்தவனங்களில் இருந்தே, கொண்டு வர வேண்டும் என்ற, உத்தரவு இருந்தது. நந்தவனங்களை பராமரிப்பதற்கென, ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அந்நந்தவனத்தில், மலர்கள் மட்டுமின்றி, பாக்கு, தென்னை, வாழை உள்ளிட்டவையும் வளர்க்கப்பட்டன. பெருமாளுக்கு படைக்கும் அமுதுக்கு, பூண் என்று பெயர். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புதிய மண் பானையில், இறைவனுக்கு படைக்க வேண்டும் எனவும், உத்தரவு இருந்தது.
குறிப்புகள்: அதை தயாரிப்பதற்கென, பணியாளர்கள் இருந்தனர். கோவில்களில் இருந்த அனைத்து நகைகளுக்கும், குறிப்புகள் இருந்தன. இக்குறிப்புகள், கல்வெட்டுகளில் காணப்படுகின்றன; சோழர்கால கல்வெட்டுகள் இருந்தாலும், பல்லவர் கால கல்வெட்டுகள், ஒன்று கூட ஸ்ரீரங்கம் கோவிலில் கிடைக்கவில்லை.
கஷாயம்: கோவில், வழிபாட்டு தலமாக மட்டுமின்றி, நூலகம், மருத்துவமனை உள்ளிட்ட வசதிகள் கொண்டதாக இருந்தது. ரங்கநாத பெருமாளுக்கு, இரண்டு நாளைக்கு ஒருமுறை, கஷாயம் படைக்கப்பட்டது. இறைவனுக்கு, நோய் நொடி அண்டக்கூடாது என்பதற்காக, அது படைக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.