பதிவு செய்த நாள்
30
டிச
2013
10:12
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலுக்கு என தயாரிக்கப்பட்ட தேர் சிதிலமடைந்து, பயன்பாடற்று விட்டது. இதனால் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலுக்கு பலவகை பெருமைகள் இருந்தும், தேரோட்டம் நடக்கவில்லையே எனும் மனக்குறை பக்தர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த குறைபாட்டை களையும் வகையிலும், பக்தர்கள் கோரிக்கையை ஏற்றும், 50 லட்சம் மதிப்பில் பிரமாண்டமான, புதிய தேர் அமைக்க, 50 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து தஞ்சை மேலவீதியில் புதிய தேர் அமைப்பு பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு, விரைவில் தேர் பணிகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளது. இந்நிலையில் புதிய தேர் தயாரானவுடன், அதனை நிறுத்துவதற்கு உரிய இடம் தேர்வில் சிக்கல் எழுந்தது. பழைய தேர் நிறுத்தப்பட்டிருந்த இடமான மேலவீதியில், தனியார் கொட்டகை அமைத்திருந்ததால், ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது. இதைத்தொடர்ந்து, தஞ்சை ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன், அரண்மனை தேவஸ்தான உதவி கமிஷனர் செந்தில்குமார், பெரியகோவில் செயல் அலுவலர் அரவிந்தன் ஆகியோர், போலீஸார் உதவியுடன், மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி, சுற்றிலும் வேலி அமைத்துள்ளனர். இதையடுத்து, புதிய தேர் நிறுத்த நிலவிவந்த "இட சிக்கல் நீங்கியது. இதனால் பக்தர்களும், அதிகாரிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.