பதிவு செய்த நாள்
02
ஜன
2014
12:01
அனுமன் ஜெயந்தி முன்னிட்டு, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், நேற்று அலங்கார, அபிஷேக பூஜை நடந்தது. உடுமலை, வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள, ஸ்ரீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா, நேற்று காலை 9.00 மணிக்கு சங்கல்பத்துடன் துவங்கியது. காலை 10.00 மணிக்கு ஆவாஹன பூஜையும், காலை 10.30 மணிக்கு ஹோமமும், காலை 11.00 மணிக்கு அபிஷேகமும், நடந்தது. மதியம் 12.00 மணிக்கு சுவாமிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை செய்யப்பட்டது. மதியம் 12.30 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள பெருமாளுக்கும், ஆஞ்நேயருக்கும் நெய் அபிஷேக பூஜை நடந்தது. பொள்ளாச்சி ரோடு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், உள்ள ஆஞ்சநேயருக்கு காலை 9.00 மணிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. ஜல்லிப்பட்டியில் உள்ள கரட்டுப்பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, காலை 9.00 மணிக்கு, சிறப்பு அலங்காரமும், காலை 10.00 மணிக்கு, வடை மாலை சாற்றப்பட்டு பூஜையும் நடந்தது. உடுமலை, நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், காலை 9.30 மணி முதல் ஆஞ்சநேயருக்கு, அபிஷேகம், ஹோமமும், தொடர்ந்து, 1008 வடை மாலை சாற்றப்பட்டு, சிறப்பு பூஜையும் நடந்தது. புவன கணபதி கோவிலிலுள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. ஜல்லிபட்டி கரட்டுப்பெருமாள் கோவிலில், ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதிகளிலுள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆங்கில புத்தாண்டு மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகியவை நேற்று ஒரே நாளில் வந்தது. இதனையொட்டி, திரளான மக்கள் கோவில்களில் வழிபட்டனர். பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலுள்ள ஆஞ்சநேயர் சன்னதியில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 10:30க்கு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி வால்பாறை ரோட்டிலுள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலிலும், நேற்று முன்தினம் மாலை, யாகத்துடன் தொடங்கிய அனுமன் ஜெயந்தி விழா, நேற்று சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. இதனையொட்டி 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி மின் அண்ணா நகரிலுள்ள வேணிநகர் ஸ்ரீ சிரஞ்சீவி ஆஞ்சநேயர் சன்னதியில்,கணபதி ஹோமம் மற்றும் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானத்துடன் பூஜைகள் நடைபெற்றன. ஆச்சிபட்டி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அனைத்து கோவில்களிலும், புத்தாண்டு மற்றும் அனுமன் ஜெயந்திக்காக, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டனர்.