பதிவு செய்த நாள்
09
ஜன
2014
10:01
திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டத்தில் இருந்து, பழநி செல்லும் பக்தர்களுக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, உள்ளாட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தைப்பூச விழாவை காண, முருக பக்தர்கள், மார்கழி இறுதி முதல் பழநிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி, தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த, பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள், செல்கின்றனர். இவர்களுக்கு, குடிநீர், அன்னதானம், தங்குமிடம், உபயதாரர்கள் உதவி செய்வர். தற்போது, வழிநெடுகிலும் உள்ள கண்மாய், ஊரணி, குளங்களில் நீரின்றி, பக்தர்கள் குளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, வழிநெடுகில் உள்ள கிராம ஊராட்சிகள், தமது சொந்த செலவுகளில், பக்தர்களுக்கு குடிநீர், குழிக்கும் தொட்டி அமைக்கவேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.