பதிவு செய்த நாள்
10
ஜன
2014
11:01
ராஜபாளையம்: சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, மதுரை, செங்கோட்டை ரயிலை, இரவில் இயக்க, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மதுரை செங்கோட்டை ரயில் வசதி , தினமும் மூன்றுமுறை உள்ளது. பஸ் கட்டணத்தை விட, ரயிலில் மூன்று மடங்கு குறைவு. மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வசதியாக உள்ளது என்பதால், கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, மதுரை, திண்டுக்கல், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், சபரிமலைக்கு செங்கோட்டை ரயிலில் செல்கின்றனர். ஏற்கனவே கூட்டம் உள்ள ரயிலில், பக்தர்களும் செல்வதால், பெண்பயணிகள் நின்றுகொண்டே செல்லும் நிலை உள்ளது. பக்தர்கள் வசதிக்காக, இரவு சிறப்பு ரயில் இயக்க,தினமும் மாலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில், இரவு 8.30 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. அங்கேயே நிற்கும் ரயில், அடுத்தநாள் காலை 7.15 மணிக்கு, செங்கோட்டையில் இருந்து மதுரை புறப்படுகிறது. இதேபோல், செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில், மதுரைக்கு 7.15 மணிக்கு செல்கிறது. அங்கேயே நிறுத்தப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு, மீண்டும் செங்கோட்டை புறப்படுகிறது. இரவில், இரு ஸ்டேஷன்களிலும் நிற்கும் ரயிலை, சிறப்பு ரயில்களாக இயக்கினால், சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். இந்த சிறப்பு ரயிலில், செங்கோட்டை செல்லும் பக்தர்கள், அங்கிருந்து, தமிழக அரசு போக்குவரத்து கழகம், கேரள அரசு பஸ்கள் மூலம், பம்பை செல்லலாம். சுவாமி தரிசனம் முடிந்தபின், சிறப்பு ரயில் மூலம், தங்களது ஊர்களுக்கு திரும்ப வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.