பதிவு செய்த நாள்
16
ஜன
2014
11:01
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தை முதல் நாளையொட்டி, விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர், சண்டிகேசுவரர், சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து விருத்தகிரீஸ்வரர், தாயார், சூரிய பகவான் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பொங்கல் பண்டிகையொட்டி, விருத்தாசலம் அடுத்த முதனை செம்பையனார் கோவிலில், நேற்று காலை ஏராளமானோர் பொங்கலிட்டு வழிபட்டனர். முதனை உட்பட பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வந்து, பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். புதுக்கூரைப்பேட்டை அய்யனார் கோவிலிலும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். ரயில்வே ஜங்ஷன் ஆட்டோ ஓட்டுனர்கள் உரிமையாளர் நலச் சங்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது. சங்கத் தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். செயலர் விஜயகுமார், பொருளாளர் சரவணன், சிறப்பு தலைவர் ரவி, கவுரவத் தலைவர் ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஆட்டோ ஸ்டேண்டில் சமத்துவப் பொங்கல் வைத்து, பயணிகள், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். விருத்தாசலம் பழமலைநாதர் நகர் அங்கன்வாடி மையத்தில் நடந்த சமத்துவப் பொங்கல் விழாவிற்கு வேளாண் விற்பனை சங்கச் செயலர் கலைமணி தலைமை தாங்கினார். மைய அமைப்பாளர் மோகனா வரவேற்றார். விற்பனை சங்கத் தலைவர் அபுல்கலாம் ஆசாத், குழந்தைகளுக்கு பொங்கல் வழங்கினார். மேற்பார்வையாளர்கள் செல்வி, கலையரசி, வீடு கட்டும் கூட்டுறவு சங்க இயக்குனர் மும்தாஜ்பேகம், அங்கன்வாடி பொறுப்பாளர்கள் அல்லிராணி, பானுமதி, வள்ளி உட்பட பலர் பங்கேற்றனர். திட்டக்குடி: வதிஷ்டபுரம், திருமகிழ்ந்தவள்ளி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில், தயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பொங்கலிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை வரத சிங்காச்சாரியார் சுவாமிகள் செய்திருந்தார். பெண்ணாடம்: அழகிய காதலியம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில், சுவாமிகளுக்கு நேற்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது.