பதிவு செய்த நாள்
17
ஜன
2014
05:01
*மனிதனாகப் பிறப்பதில் பெருமையில்லை. மனிதப்பண்போடு வாழ்வதில் தான் அவனது பெருமை அடங்கியிருக்கிறது. உயர்ந்த சிந்தனையுடன் நற்செயல்களைச் செய்பவனே மனிதர்களில் சிறந்தவன்.
*நம் மனதில் வளர்க்கும் ஆசை எண்ணங்களே, நம்மை வண்டிச்சக்கரம் போல, பிறப்பிலும் இறப்பிலும் ஈடுபட்டு சுழலச் செய்கின்றன.
*கடவுளின் அருட்கொடையே மனிதப்பிறவி. அதைக் கொண்டு கடவுளுக்குத் தொண்டு செய்ய வேண்டும். வெறும் பட்டம், பதவி, பணம் போன்ற விஷயங்களை மட்டும் தேடிக் கொண்டிருப்பது கூடாது.
*கடவுளை அடையும் நோக்கத்துடன் வாழ்பவர்களே சான்றோர்கள். உலகியல் ஈடுபாட்டுடன் பணம் தேடும் மனிதர்கள் அனைவரும்
சாதாரணமானவர்கள் தான்.
*உயர்ந்த குறிக்கோளை ஏற்படுத்திக் கொண்டு மனிதன், அதை நோக்கி முன்னேற வேண்டும். குறிக்கோள் இல்லாத மனிதனை மிருகம்
என்று தான் சொல்ல வேண்டும். கடவுளின் அருளைப் பெறுவது மட்டுமே மனித வாழ்வின் குறிக்கோள்.
*வாழ்க்கையைத் தாங்கும் நான்கு தூண்களாக இருப்பது மாதா, பிதா, குரு, தெய்வம்.
*பிறப்பினால் உயர்வு, தாழ்வு கருதுவது கூடாது. ஜாதி, இனம் போன்ற பிரிவுகள் நாட்டை பாழ்படுத்தும் பேய், பூத, பிசாசுகள் என்று தான் சொல்ல வேண்டும்.
*உலகம் மாறிவிட்டது என்று சொல்வது கூடாது. உலகம் மாறிப் போகவில்லை. கடவுள் படைத்தது போலவே இருக்கிறது. மக்களின் மனம் தான் கெட்டுப் போய் விட்டது.
*செல்வம் சேர்க்க வேண்டும் என்று இன்றைய மனிதன் பேயாக அலைகிறான். செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்கிறார் குமரகுருபரர்.
*தனிமனிதன் மட்டுமில்லாமல் சமுதாயமே ஒழுக்கத்தைப் பேண வேண்டும். ஒழுக்கமற்ற எந்த சமுதாயமும் கறை படிந்த பக்கங்களையே தன் வரலாறாகக் கொண்டிருக்கும்.
*அமைதியில்லாத மாடமாளிகையை விட, நிம்மதி தரும் குடிசை மேலானது.
*முன்னேற்றத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. முயற்சிப்பவர் யாரும் அதை அடையாமல் இருப்பதில்லை.
* இளைஞர்கள் துணிவும், விவேகமும் கொண்டு, கடமையில் ஈடுபடுபவர்களாக விளங்கவேண்டும். இதனையே தைரியம் புருஷலட்சணம் என்பர்.
*மனிதனின் தலையாய கடமை உழைப்பது தான். உழைக்க மறுப்பவனை வறுமையும், பழியும் வந்தடைவது உறுதி.
*மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு மனவளமே அடிப்படை. பணபலம் இருந்தாலும், நல்லொழுக்கம், பக்தி போன்ற உயர்பண்புகள் இல்லாத மனிதன் சலிப்புக்கு ஆளாவது உறுதி.
*வாழ்வில் குறுக்கிடும் கொடிய பிரச்னைகளைக் கண்டு பயப்படக்கூடாது. துன்பத்தின் மூலம் தான் அனுபவ பாடமும், உழைப்பதற்கான
ஊக்கமும், மன உறுதியும், முன்னேறுவதற்கான வழியும் நமக்கு கிடைக்கிறது.
*சிறுவிஷயம் தானே என்று எதிலும் அலட்சியம் கொள்வது கூடாது. இதனால், பெரிய இழப்பை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகி விடும்.