பதிவு செய்த நாள்
21
ஜன
2014
11:01
கோல்கட்டா: திருப்பதி வெங்கடேச பெருமாள் உருவத்துடன், சிறிய வைரக் கல் பதித்த, பிரத்யேக சேகரிப்பிற்கான வெள்ளி நாணயங்களை, பலாவ் நாடு வெளியிட உள்ளது. வெளிநாட்டு அரசு ஒன்று, இந்து கடவுள் உருவத்துடன கூடிய நாணயம் ஒன்றை வெளியிடுவது, இதுவே முதன் முறை. ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட இந்த நாணயங்களில், பெருமாள் உருவத்துடன், நடுவே சிறிய வைரக் கல் ஒன்றும், சுற்றிலும், "ஸ்வரோவ்ஸ்கி படிக கற்களும் பதிக்கப்பட்டிருக்கும். பலாவ் நாடு, ஒரு அவுன்ஸ் மற்றும் 3 அவுன்ஸ் வீதம், முறையே, 1,111 மற்றும் 511 வெள்ளி நாணயங்களை வெளியிட உள்ளது. ஒரு அவுன்ஸ் நாணயத்தின் விலை, 11,111 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 அவுன்ஸ் நாணயத்தின் மத்தியில் சிறிய வைரக் கல்லும், சுற்றிலும், 6 ஸ்வரோவ்ஸ்கி படிக கற்களும் பதிக்கப்பட்டிருக்கும். நாளை, கோல்கட்டாவில், இந்த நாணயத்தின் விற்பனை துவங்கினாலும், வரும் ஏப்ரல், 16ம் தேதி, சித்ரா பவுர்ணமி அன்று தான், சப்ளை செய்யப்படும். எல்.இ.டி., விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமலை கோவில் வடிவ பேழையின் நடுவே, ஒவ்வொரு நாணயமும் வைக்கப்பட்டிருக்கும். இந்தியாவில், இந்த நாணயங்களை விற்பனை செய்யும் உரிமயை, ஏ.ஜி.இம்பெக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.