பதிவு செய்த நாள்
23
ஜன
2014
11:01
செஞ்சி: செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலைகளை இந்திய தொல்லியல் துறையினர் அகற்றினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சிகோட்டையின் உள்ளே வீர ஆஞ்சநேயர், கமலக்கன்னியம்மன், காளியம்மன், மகாலிங்கேஸ்வரர் கோவில், வேணுகோபல் சுவாமி கோவில், ரங்கநாதர் கோவில், வெங்கட்ரமணர் கோவில் உட்பட 10க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில் ஆஞ்சநேயர், கமலக்கன்னியம்மன், காளியம்மன் கோவில்கள் தவிர மற்ற கோவில்கள் படையெடுப்பின் போது சின்னாபின்னமாயின. அதில் இருந்த சுவாமி சிலைகள் அகற்றப்பட்டன. இதே போன்று சூறையாடப்பட்ட கோவில்களில் முத்தையாலு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட வெங்கட்ராமணர் கோவிலிலும் ஒன்று. இதில் சுவாமி சிலைகள் இல்லை. சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் கோவில் சுற்றுச் சுவருடன் முழு அமைப்புடன் இன்று வரை கம்பீரமாக காணப்படுகிறது. இந்திய தொல்லியல் துறையினர் இந்த கோவிலைப் பராமரித்து வருகின்றனர். கடந்த 13ம் தேதி இரவு இந்த கோவில் கதவின் பூட்டு, கருவறை பூட்டை உடைந்துச் சென்ற நபர்கள், இரண்டரை அடி உயரமுள்ள ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் மற்றும் அம்பாள் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். 14ம் தேதி காலை 8 மணிக்கு வழக்கமான கண்காணிப்பு பணிக்கு சென்ற கோட்டை ஊழியர்கள் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர். பராமரிப்பு அலுவலர் வரதராஜ் சுரேஷ் வந்து, கோவிலில் இருந்த சிலைகளை உடனடியாக அப்புறப்படுத்தி இந்திய தொல்லியல் துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றார். இது குறித்து அவர் கொடுத்துள்ள புகாரின் பேரில் செஞ்சி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.