உடுமலை: பழநி பாத யாத்திரை பக்தர்கள் பாதுகாப்பு விழா, உடுமலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்தது. உடுமலை போலீசார், ஊர்காவல்படை மற்றும் பழனியாண்டவர் பக்தர் பேரவை இணைந்து நடத்திய இவ்விழா, பழநி ரோடு உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில், நடந்தது. உடுமலை டி.எஸ்.பி., பிச்சை தலைமை வகித்தார். பழனியாண்டவர் பக்தர் பேரவை செயலாளர் கண்ணன் வரவேற்றார். கோவை, பொள்ளாச்சி ரோடு வழியாக, உடுமலையை கடந்து பழநிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர் பாக்கெட், பிஸ்கெட் மற்றும் உணவு பாக்கெட்கள் வழங்கப்பட்டன. இரவில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களை விபத்தில் இருந்து காக்கும் வகையில், ஒளிரும் ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீசார் வழங்கினர். பக்தர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தமிழ்மணி, மாவட்ட ஊர்க்காவல்படை உடுமலை வட்டத்தை சேர்ந்த ஜெயபாலன், பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.