பதிவு செய்த நாள்
23
ஜன
2014
11:01
உடுமலை: ஆல்கொண்டமால் கோவிலுக்கு தானமாக அளிக்கப்படும், கன்றுகளை தொடர்ந்து பராமரிக்கும் வகையில், கோவிலில் கோசாலை அமைக் கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை சோமவாரப்பட்டியிலுள்ள ஆல்கொண்டமால் கோவிலில், கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு, பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்துகின்றனர். மேலும், பொங்கலன்று கால்நடைகள் ஈன்றெடுக்கும் கன்றுகள் ஆல்கொண்டமாலுக்கு உரியவை என்ற நம்பிக்கையில் கன்றுகள் தானமாக கோவிலுக்கு அளிக்கப்படுகின்றன. இவ்வாறு, தானமாக அளிக்கப்படும் கன்றுகளுக்கு, இந்து அறநிலையத்துறை சார்பில் பராமரிப்பு நிதி என்ற அடிப்படையில் ஆயிரம் ரூபாய் நிதி பக்தர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவிலுக்கு வழங்கப்படும் கன்றுகள், பல்வேறு அரசு திட்ட பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆளுங்கட்சியினர் அளிக்கும் பரிந்துரை பட்டியல் அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கன்றுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, புதுவாழ்வு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு போன்ற திட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு, வழங்கப்படும் கன்றுகளை பெரும்பாலான பயனாளிகள் முறையாக பராமரிக்காமல், குறுகிய காலத்தில், விற்பனை செய்து விடுவதும்; அவை இறைச்சிக்காக அனுப்பப்படும் அவலமும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இறைவனுக்காக பக்தர்கள் அளிக்கும் தானம் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படும் அவலத்தை தடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தாண்டு திருவிழாவையொட்டி, 34 கன்றுகள் தானமாக கோவிலுக்கு அளிக்கப்பட்டன. இவை பல்வேறு பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. உண்டியல் உட்பட பல்வேறு வருவாயினங்கள் மூலம் கோவிலுக்கு 10 லட்ச ரூபாய் வரை வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிதியில், கோசாலை அமைத்து கன்றுகளை பராமரிக்கலாம். கோவிலுக்கு சொந்தமான நிலம் கோவில் அருகிலேயும், கிணறு, போர்வெல் போன்ற நீராதாரங்களும் அப்பகுதியிலேயே உள்ளது. எனவே இந்து அறநிலையத்துறை சார்பில், கோவில் பகுதியிலேயே கோசாலை அமைக்க வேண்டும். கன்றுகளை தானமாக அளிக்க, பக்தர்களிடம் வசூலிக்கப்படும் தொகையை முறையாக பராமரிப்பிற்கு பயன்படுத்த வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.