பதிவு செய்த நாள்
29
ஜன
2014
10:01
பழநி: பழநிகோயில் முடிகாணிக்கை நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், நிரந்தரப்பணி, ஊதியம் வழங்கக்கோரி திடீர் வேலைநிறுத்தம் செய்தனர். பழநிகோயில் நிர்வாகத்தின் கீழ், சரவணப்பொய்கை, பூங்காரோடு, சண்முகநதி, பாதவிநாயகர் கோயில் உட்பட 7 இடங்களில், முடிகாணிக்கை நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு முடிகாணிக்கை செலுத்த ஒருவருக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் முடியெடுக்கு தொழிலாளர்களுக்கு ரூ.5 பங்குத்தொகைøயாக கோயில்நிர்வாகம் வழங்குகிறது. ஊதியம் கிடையாது.முடி காணிக்கைசெலுத்த வரும் பக்தர்களிடம், ரூ.50 முதல் ரூ.80 வரை தொழிலாளர்கள் வாங்குகின்றனர். இது தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் பக்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து, முடியெடுக்கும் தொழிலாளர்கள் நேற்று காலை 10 மணியளவில், நிரந்தரப்பணி, ஊதியம் வழங்ககோரி திடீர் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் பக்தர்கள், டிக்கெட் வாங்கும் இடத்தில், நீண்ட நேரம் காத்திருந்தனர். தகவலறிந்த கோயில் அதிகாரிகள், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை அரசிடம் தெரிவிப்பதாக கூறினர். இதையடுத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.தொழிலாளர்கள் கூறியதாவது: மொத்தம் 330 தொழிலாளர்கள் முடியெடுக்கும் பணியில் இருக்கிறோம். ரூ.10 கட்டணத்தில் ரூ.5 பங்குதொகையாக தருகின்றனர். அதை எங்களுக்குள் பகிர்ந்தால், மாத ஊதியமாக ஒருவருக்கு ரூ.400 தான் கிடைக்கிறது. இதனால், பக்தர்களிடம் பணம் வசூல் செய்கிறோம். நிரந்தப்பணி, மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பலமுறை, கோயில் நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். எந்த நடவடிக்கை இல்லை. தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.