தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடினர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2014 12:01
தூத்துக்குடி: தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஏரல், கடற்கரை பகுதியில் பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, புனித நீராடினர். தை அமாவாசை தினத்தன்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடுவது வழக்கம். இதன் படி திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கடற்கரை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு கடலில் புனித நீராடினர். பின் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். காலை 7 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
ஏரல்: ஏரலில் உள்ள சேர்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் திரண்டனர். கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம், தீபாரதணை நடந்தது. தாமிரபரணி நதிக்கரையில் பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடற்கரை பகுதி, துறைமுக பார்க் பகுதி, தாமிரபரணி ஆற்று கரையோர்களில் பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்ததால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.