திண்டுக்கல், நன்மைதரும் 108 விநாயகர் கோயிலில் சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது பிரம்மாண்ட விநாயகர் சிலை. இந்த விநாயகர் மற்றும் பீடத்துக்கென ஊத்துக்குளி அருகே வெள்ளியம்பாளையம் பாறையில் கல் பெயர்க்கப்பட்டுள்ளது. விநாயகர் திருவுருவச் சிலைக்கு மட்டுமாக சுமார் இருநூறு டன் எடை கொண்ட பாறை பெயர்க்கப்பட்டது. சிலையாகச் செதுக்கியது போக முழு உருவ விநாயகர், ஒரே கல்லில் சுமார் நூற்றியறுபது டன் எடை கொண்டவராக வடிவமைக்கப்பட்டுள்ளார். திருமுருகன் பூண்டி சண்முகவேல் ஸ்தபதி குழுவினரே, இந்த பிரம்மாண்ட விநாயகரைச் செதுக்கி வடிவமைத்துள்ளார். முப்பத்தியிரண்டு அடி உயரமும் பதினாறடி அகலமும் கொண்ட விநாயகர் கற்சிலையைப் பிரதிஷ்டை செய்ய, மிகப் பிரம்மாண்ட பீடமும் உருவாக்கப்பட்டது. பீடம் தரை மட்டத்துக்குக் கீழே இருபது அடி ஆழத்துக்கு கரணைக்கல் பரப்பி வலுவாக்கப்பட்டுள்ளது. தரைக்கு மேலே ஐந்தே முக்காலடி உயரத்துக்கு பீடம் எழுப்பப்பட்டுள்ளது. இவை அனைத்துமே நன்மை தரும் 108 விநாயகப் பெருமான்களின் திருவுளச் சீட்டு மகிமையின்படியே நிறைவேறியுள்ளது ! என்கிறார் கோயிலின் நிர்வாகியும், அறங்காவலர் குழுத் தலைவர்.