பதிவு செய்த நாள்
16
ஏப்
2011
05:04
அபிஷேக பிரியரான சிவனுக்கு, கோயில்களில் விதவிதமான அபிஷேகம் செய்து பூஜை செய்வர். சிவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்வர். ஆனால், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மார்க்கண்டேயரின் ஆயுளை முடிக்கச்சென்ற எமதர்மன், தவறுதலாக சிவன் மீது பாசக்கயிறை வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியை சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக பிறக்கும்படி செய்துவிட்டார். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெறுவதற்காக பல தலங்களில் சிவனை வழிபட்டு வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது, சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், இங்கு லிங்க வடிவம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மணலால் லிங்கம் செய்ய நினைத்து, ஒரு குச்சியால் தரையை தோண்டினார். அப்போது, நுரை பொங்கியது. மணலையும், நுரையையும் சேர்த்து அவர் லிங்கமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்து, பறிக்கப்பட்ட எமலோக தலைவர் பதவியை மீண்டும் கொடுத்தார். காலனுக்கு (எமன்) காலம் (வாழ்க்கை, பதவி) கொடுத்தவர் என்பதால் இத்தலத்து ஈசன், காலகாலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்தில் சுவாமி, மணல் லிங்கமாக இருப்பதால், அபிஷேகம் செய்யப்படுவதில்லை.