Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மாவளத்தான்! மாவளத்தான்! மாதன்னா- அக்கன்னா மாதன்னா- அக்கன்னா
முதல் பக்கம் » பிரபலங்கள்
வலங்கைமான் கோவிந்த செட்டியார்!
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 பிப்
2014
14:49

செட்டியார்வாள், காணாமால் போன என் பரம்பரை நகைகளைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று மயிலம் ஜமீன்தார் அழாக் குறையாகக் கூறினார். கோவிந்த செட்டியார் என்ற சோதிடர் கண் மூடினார். ஜமீன்தாரின் படபடப்பு தணிந்தது. சோதிடர் என்ன கூறுவாரோ என்ற எதிர்பார்ப்பில், ஜமீன்தார் நிலைகொள்ளாதிருந்தார். சோதிடர்கண் திறந்து, ஜமீன்தார்வாள், உமது மாளிகையில் உள்ள கிணற்றில் அந்த நகை முழுவதும் பத்திரமாக இருக்கு என்றார். ஜமீன்தார் வாயெல்லாம் வெற்றிலைப் பல்லாக, போன உயிர் வந்ததுபோல் ஓடினார். உடன் வந்த கணக்குப் பிள்ளையைச் சோதிடர் தனியாக அழைத்தார். அவரை உற்றுப் பார்த்து, ஏன் ஓய், உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்றீர்? ஜமீன்தாருடனே இருந்து கொண்டு, அவரது சொத்தையே திருடிவிட்டீர் இல்லையா? என்று சற்று கடுமையாகக் கேட்டார் செட்டியார். கணக்குப் பிள்ளை செட்டியாரின் காலில் வீழ்ந்தார். சரி, சரி, இனிமேலாவது தர்ம வழியில் வாழ முயற்சி செய்யும் என அவரை மன்னித்து அனுப்பினார். கோவிந்த செட்டியாரின் சித்திகளும் அதன் சக்திகளும் பிரசித்தி பெற்றவை. அதைவிட முக்கியம் தான் சம்பாதித்ததை ஏழைகளுக்காகச் செலவழிப்பார். ஏழைகளின் ஆடுகள், கோழிகள் காணாமல் போய்விட்டால், அந்த ஜனங்கள் அவரது ஓட்டு வீட்டின் முன் நிற்பார்கள். சோதிடர் அவர்களைப் பார்த்ததும், காணாமல் போனதைப் பற்றி உடனே கூறிவிடுவார்.

இப்படியாக அவரது புகழ் தனது சொந்த ஊரான வலங்கைமானிலிருந்து மைசூர் வரை சென்றது. வந்து விட்ட சங்கடங்களையும் வரப் போகும் அச்சுறுத்தல்களையும் தீர்த்துக் கொள்ள பெரும் செல்வந்தர்களும் ஆங்கிலேய கனவான்களும் வந்தனர். சோதிடர் இப்படி வாழ்ந்து வந்தபோது அவரைக் காண, ஜீவர்களைக் கடைத்தேற்றும் சிந்தாமணி சுவாமி விவேகானந்தர் வந்தார். சுவாமிஜி அமெரிக்கா செல்வதற்கு முந்தைய காலம். 1893-ஆம் ஆண்டு பரிவ்ராஜகராக சுவாமிஜி தமிழ்நாட்டில் சஞ்சரித்து வந்தார். சென்னையில் சுவாமிஜி இருந்த நேரம் ஒரு நாள் கனவு ஒன்று கண்டார். திடுக்கிட்டு எழுந்து தவித்த தம் குருவிடம் அளசிங்கப் பெருமாள், சுவாமிஜி, ஏதாவது சொப்பனமா? என விசாரித்தார்.  ஆம் அளசிங்கா. என் தாய் தவறி விட்டதாக ஒரு கனவு. அவரைப் போய் பார்த்து வர மனம் விழைகிறது. ஆனால் முடியாதே... என்று விவேகானந்தர் ஒரு தலைமகனாகத் தனியே தவித்தார். இது வெறும் கனவுதான் சுவாமிஜி, விடுங்கள் என்று மன்மத் பட்டாச்சார்யர் என்ற அன்பர் ஆறுதலளித்தார். சுவாமிஜி அமைதியாகவில்லை. அதைக் கவனித்த அளசிங்கர் வலங்கைமான் சோதிடரிடம் சென்று குறி கேட்டால், தெளிவு பிறக்கும் என்றார். புறப்பட்டார் சுவாமிஜி இந்த இருவருடன்.

முதலில் ரயிலில், பின் நடந்து வலங்கைமானை அடைந்தார்கள். சோதிடரின் வீட்டைத் தேடிப் பிடித்தனர். அளசிங்கா, இவரைப் பற்றி நீ பெருமையாகச் சொல்கிறாய். எனக்கு இவரிடம் மூன்று கேள்விகள் உள்ளன. அவற்றைக் கேட்டு இவரின் சித்திகளைச் சோதித்துப் பார்க்கலாம் என்றார் சுவாமிஜி. சோதிடரின் கூரை வீட்டுக்குள், தாழ்வாரத்தில் மன்மத், அளசிங்கர் மற்றும் சுவாமிஜியும் கோவிந்தசெட்டிக்காகக் காத்திருந்தனர். கோவிந்த செட்டி வந்தார். அவரது முகம் காய்ச்சல் வந்ததுபோல் கருமையாக, இறுக்கமாக இருந்தது. வந்துள்ளவர்களைப் பார்த்தும் பார்க்காதவர் போல் இருந்தார். போய் விடலாமா என்று சுவாமிஜி சீடரைக் கேட்டார். அதற்குள் செட்டியாரே அவர்களிடம் அமைதி காக்க சைகை செய்தார். பிறகு எழுந்து வந்து, என் உடம்பு சரியில்லை. இன்று சோதிடம் சொல்ல முடியாது. சொல்லித்தான் ஆகணும்னா பத்து ரூபா எடுத்து வையும் என்றார். சீடர்கள் பணத்தைத் தரத் தயாராய் இருந்தனர். பிறகு செட்டியார் தனது அறைக்குச் சென்றார். முகம் கழுவினார். வெளியே வந்தார். சுவாமிஜியை உற்றுப் பார்த்தார். அந்தத் திருமுகத்தில் செட்டியார் என்ன கண்டாரோ? சுவாமிஜியைக் கனிவுடன் பார்த்தார். உடனே வீட்டினுள்ளே சென்றார்.

விபூதிப் பையை எடுத்து வந்து சுவாமிஜியிடம் நீட்டி, சாமி, எனக்கு இந்த விபூதியைப் பூசினால் என் காய்ச்சல் குணமடையும், பிறகு நான் உங்களுக்குக் குறி சொல்வேன் என்று தமிழில் கூறினார். அளசிங்கர் ஆங்கிலத்தில் சுவாமிஜியிடம் கூறினார். சுவாமிஜி வினயத்துடன், ஐயா என்னிடம் அது போன்ற சித்திகள் ஏதுமில்லை என்றார். ஆனாலும் செட்டியார்  சுவாமிஜி விபூதி தர வேண்டும் என்று வலியுறுத்தினார். சுவாமிஜி விபூதி வழங்கினார். உடனே செட்டியார் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி, அதை சுவாமிஜியிடம் கொடுத்துக் கையொப்பமிடும்படிக் கூறினார். பிறகு அந்தத் தாளை மன்மத்தின் சட்டைப் பையில் வைத்தார். சுவாமிஜிக்கு இது வியப்பை ஏற்படுத்தியது. செட்டியார் சுவாமிஜியை ஒரு நோட்டமிட்டபடி, சாமி, துறவியான நீங்கள் ஏன் உங்கள் அம்மாவைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்? என யாரும் எதுவும் சொல்வதற்கு முன்பே கேட்டார். தமது மனதில் உள்ளதைத் தெளிவாகச் சொல்பவரைப் பார்த்து வியந்த சுவாமிஜி அவரது கேள்விக்கு விடையாக, ஐயா, ஆதிசங்கரர்கூட தமது தாயைப் பற்றிக் கவலைப்பட்டாரே...! என்றார். அந்தப் பதிலால் மகிழ்ந்த செட்டியார், உங்கள் தாய் நலமாகவே இருக்கிறார் என்றார்.

செட்டியார் மிக அமைதியாக மன்மத் சட்டைப் பையிலிருந்து காகிதத்தை எடுக்கச் சொன்னார். அதில் சுவாமிஜியின் தாயாரின் சொந்தப் பெயரும் அவரைப் பற்றிய பல தகவல்கள் எழுதப்பட்டிருந்ததையும் தெளிவாகக் கூறினார். தமது குருவின் திருநாமத்தைச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். சோதிடர் சரியாகக் கூறினார். சாமி, அதுவும், அதோடு நீங்கள் என்னிடம் கேட்க நினைத்த திபெத்திய மந்திரத்தையும் நான் ஏற்கனவே காகிதத்தில் எழுதிவிட்டேன் என்றார். சுவாமிஜி அளசிங்கரைப் பார்த்தார். அளசிங்கர் வாசித்தார். உங்களது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்துவிட்டார். ஆனாலும் அவர் சூட்சும சரீரத்தில் இருந்தபடி உங்களைக் காத்து வருகிறார் என்று இருந்தது. தாய் நலமென அறிந்ததுடன் தாயும் தந்தையுமாகிவிட்ட குருதேவர் தம்மைக் காத்து வருகிறார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமானதால் சுவாமிஜியின் கண்களில் கண்ணீர் பெருகிற்று. பிறகு செட்டியார், சுவாமி, நீங்கள் விரைவில் தூர தேசங்களுக்குச் சென்று நமது மதத்தைப் பிரச்சாரம் செய்வீர்கள் என்றார். அளசிங்கர் உடனே பெருமிதமாய் சுவாமிஜியை நோக்கினார். சுவாமிஜி சோதிடரின் நடவடிக்கைகளைப் பார்த்தார். சுவாமிஜியிடமிருந்து அவர் பணம் பெற மறுத்துவிட்டார். தமது குடும்பத்தினரை அழைத்து சோதிடர், வாங்க எல்லோரும். இவர் ஒரு பெரிய பரமஹம்சரோட சீடர். காலில் விழுந்து நமஸ்காரம் செய்யுங்க. சாமி கையிலிருந்து விபூதி வாங்கிக்குங்க என்றார். அதன்படியே நடந்தது. சுவாமிஜிக்காகச் சோதிடர் நீண்ட நேரம் செலவழித்ததால், வெளியில் தங்கள் பிரச்சனைகளின் தீர்வுக்காக காத்திருக்கும் கிராம மக்களின் கூட்டம் அதிகரித்தது.

சுவாமிஜியிடம் சோதிடர் கூறிவிட்டு, வெளியே சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்குக் குறி சொன்னார். சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டினுள் நுழைந்தார். கூடத்தில் இருந்த சுவாமிஜியிடம், சுவாமி, நீங்கள் அடியேனின் சேவையை ஏற்றுக் கொண்டு என்னை ஆசீர்வதியுங்கள் என்றார். சோதிடரின் வற்புறுத்தலுக்காக சுவாமிஜி அவர் தந்த பாலை அருந்தினார். பிறகு சுவாமிஜி, ஐயா, இந்த அனுமாஷ்யமான ஆற்றலை எப்படி பெற்றீர்கள்? என்று கேட்டார். முதலில் சோதிடர் பதில் கூறவில்லை. பிறகு அவர் சுவாமிஜியிடம் மெல்ல, சாமி தேவியின் சகாயத்தால் பெறப்பட்ட சித்தி மந்திரங்களால் இவை நடைபெறுகின்றன என்றார். ஓ அப்படியா! என்று சுவாமிஜி செட்டியாரிடம் ஏதோ கூற நினைத்தும், அந்தக் கிராம மக்களைப் பார்த்து ஏதும் கூறாது கிளம்பினார். கோவிந்த செட்டியார் குறி சொன்னவாறே, சுவாமிஜி தமது குருதேவரின் அருளால் மேலைநாடுகளில் இந்து மதத்தைப் பரப்பினார். 1897-ல் தாயகம் திரும்பினார் வேதாந்த வெற்றி வீரராக. இலங்கை முதல் ஒவ்வோர் ஊராகச் சமய முழக்கமிட்டபடி வந்தார். பிப்ரவரி 3-ஆம் தேதி கும்பகோணத்தில் வேதாந்தத்தின் செய்தி என்ற அற்புத உரையை நிகழ்த்தினார் சுவாமிஜி. ஆயிரக்கணக்கான மக்கள் அலைமோதிய அந்தக் கூட்டத்தில் கோவிந்த செட்டியும் இருந்தார். சுவாமிஜியைப் பார்த்ததும், அடடா, இவர் முன்பு வலங்கைமான் வந்த வங்கத் துறவி யல்லவா என்று நினைவுகூர்ந்தார். அன்று பிரபலமாகாதவர், இன்று பிரபஞ்ச நாயகனாக வந்துள்ளாரே என ஒதுங்கியே நின்றார்.

கோவிந்த செட்டியாரை சுவாமிஜி பார்த்து விட்டார். உடனே அருகிலிருந்த ஒருவரிடம், அந்தச் சோதிடரிடம் என்னைச் சந்திக்கும்படி கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். விவரமறிந்து செட்டியார் சுவாமிஜியைத் தனியே சந்தித்தார். சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். சுவாமிஜி நலம் விசாரித்தார். ஓரிரு பொதுவான கேள்விகளைக் கேட்டுவிட்டு, சோதிடரே, உங்களுக்கு வாய்த்துள்ள சித்திகள் உங்களுக்குப் பெயரும் புகழும் பணமும் தருகின்றன. தவறில்லைதான். ஆனால் அதுவே உங்கள் வாழ்க்கையைக் கடைத்தேற்றி விடுமா? என்று சுவாமிஜி கேட்டதும், கோவிந்த செட்டியார் மவுனமானார். சுவாமிஜியின் தீர்க்கமான கண்களிலும் அவரது வார்த்தையிலும் உள்ள சத்தியத்தைக் கண்டார் சோதிடர். அன்பரே, சமயச் சடங்கு, சமுதாயக் கடமை போன்ற வாழ்க்கை எல்லாம் சரிதான். ஆனால், ஆன்மிகம் என்று வந்தால் நீங்கள் எங்கு ஆரம்பித்தீர்களோ, அங்குதானே நிற்கிறீர்கள்... இல்லையா? செட்டியாரின் கண்களில் நீர் பெருகியது. அது சுவாமிஜியின் நெஞ்சில் ஊற்றெடுத்த கருணையால் வந்த விளைவு. கைகூப்பி, தன் ஜீவனைக் கடைத்தேற்றுமாறு பணிந்து நின்றார் செட்டியார். சுவாமிஜி ஆனந்த மேலீட்டால் அவரை ஆலிங்கனம் செய்தார். ஸ்ரீராமர் அனுமனுக்குத் தந்த ஆசிர்வாதம் போன்றதல்லவா, அது! சுவாமிஜி புறப்பட்டார். சோதிடரும் தமது நூறு சதவிகித ஆன்மிக வாழ்வை நோக்கிப் புறப்பட்டார். இதன் பின் சோதிடருக்கு எல்லாம் முன்பு போலவே இருந்தது. ஆனால், தெய்வம் அவருக்கு முன்பு எல்லாமாகி நின்றது. சில வருடங்களுக்குப் பிறகு....

ஒவ்வொரு வருடமும் நவமியன்று ஸ்ரீராமரின் ஊர்வலம் சோதிடரின் வீட்டு முன் நிறுத்தப்பட்டு உறியடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த ஆண்டு சோதிடர் ஏனோ, உறியடித்தல் நிகழ்ச்சி தமது வீட்டு முன்பு நடக்க வேண்டாம் என்று கூறினார். ஸ்ரீராம ஊர்வலம் புறப்பட்டது. வாசலிலிருந்து சோதிடர் ஸ்ரீராமரைப் பக்தியுடன் வணங்கி நின்றார். உறியடித்தலைத் தன் வீட்டுமுன்பு நடத்த வேண்டாம் என்று சொன்ன சோதிடரின், தொங்கிக் கொண்டிருந்த வாழ்க்கை எனும் உறியடிப் பானையை அன்று ஸ்ரீராமரே அடித்து அனுக்கிரகித்தார் போலும். ஆம், சோதிடர் அன்று பகவானின் தரிசனமே பெற்றார். ஸ்ரீராமதரிசனம் பெற்ற அந்த மேலான நிலையிலேயே ராமருடனேயே ஐக்கியமானார். இது சத்குருவின் ஸ்பரிச தீட்சை தந்த விளைவோ! மான் சஞ்சலமே உருவானது. தனது அன்னை குறித்த சஞ்சலத்திற்காக வலங்கைமானுக்கு வந்த சுவாமிஜி, கோவிந்த செட்டியாருக்குச் சம்சார சஞ்சலத்தை நீக்கி யோக ÷க்ஷமம் வழங்கினார். அது, வலக்கையில் மானைக் கொண்ட சிவனின் கருணையைப் போன்றதல்லவா!

 
மேலும் பிரபலங்கள் »
temple

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.