நலங்கிள்ளி என்பவன் சங்கக் காலச் சோழ அரசன். பேராற்றல் கொண்ட அவனுக்கு, தம்பி மாவளத்தான் என்பவன். மிகுந்த ஆற்றல் படைத்தவன் என்பதை அவனது பெயரே சொல்லும். ஒரு நாள் மாவளத்தான் அரச மாளிகையில் அழகான மண்டபத்தில் அமர்ந்திருக்கின்றான். அப்போது தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் அங்கே வருகிறார். தாமப்பல் என்பது ஓர் ஊர். இவ்வூர் இப்போது காஞ்சிபுரத்திற்கு அண்மையில் தாமல் என்று சிதைந்து அவரது வழங்கி வருகின்றது. கண்ணன் என்பது அவரது இயற்பெயர். உயர்வுச் சிறப்புக் கருதி அவரை கண்ணனார் என அனைவரும் அழைத்தனர். வந்த புலவரை எழுந்து வரவேற்று இருக்கையில் அமரச் செய்கிறான் மாவளத்தான். அவன் முன்பு வட்டாடு அரங்கம் அமைக்கப்பட்டு வட்டாடு கருவியும் உள்ளதை ஆவலோடு புலவர் பார்க்கிறார். அவரது ஆவலை உணர்ந்து கொண்ட மாவளத்தான் அவரை வட்டாட அன்போடு அழைக்கிறான். வட்டாடுதல் என்பது சங்க கால விளையாட்டு. இருவரும் ஆடத் தொடங்குகின்றனர். சிறு பொழுதுக்குள் ஆட்டம் விறுவிறுப்பு அடைய புலவர் தோல்வியை நோக்கி மெல்ல மெல்லத் தள்ளப்படுகின்றார்.
தோல்வி பெற விரும்பாத புலவர், மாவளத்தான் கண் இமைக்கும் நேரத்தில் வட்டைத் தன் வலக்கையில் மறைத்துக் கொண்டு அது எங்கோ தொலைந்து போய்விட்டது போலத் தேடத் தொடங்கினார். அகத்தின் அழகு முகத்தில் தெரிவதை மாவளத்தான் புரிந்து கொண்டான். அவ்வளவுதான், புலவர் சற்றும் எதிர்பாராதவாறு சட்டென்று அவரது வலக்கையைத் தன் இரு கரங்களாலும் பற்றிக் கொண்டு உள்ளங்கையில் அவர் மறைத்து வைத்திருந்த வட்டை எடுத்தான். மாளவத்தானுக்குப் புலவரது செயல் மிகுந்த கோபத்தைத் தந்ததால் வட்டை அவர் மீதே விட்டெறிந்தான். கோபம் குடியைக் கெடுக்கும் அல்லவா? மாவளத்தான் இவ்வாறு குணம் கெட்டு நடந்து கொண்டபோது புலவரும் தம் நிலை மறந்து கொதித்தெழுந்தார். விளையாட்டு வினையானது! மாவளத்தானைப் பார்த்து சொல்லக் கூடாத சொற்களால் அவனைச் சுட்டார் புலவர். இது கொன்றிடல் போன்ற ஒரு சொற்றொடர். புலவர், மாவளத்தானிடம் சொன்ன கொடுஞ்சொல்: நீ சோழனுக்குப் பிறந்தவன் இல்லை.
அவ்வளவுதான், இந்த வசைமொழிக்குப் பின் அந்த இடத்தில் என்ன நிகழ்ந்திருக்க வேண்டும்? நாம் நினைப்பது போல, புலவரது தலை மாவளத்தானின் வாளால் துண்டாடப்படவில்லை, புயல் வீசவும் இல்லை; எரிமலை வெடிக்கவும் இல்லை. அப்போது அங்கே முழு அமைதி நிலவியது. சோழப் பேரரசின் பேராற்றல் மிக்க இளவரசன் தலைகுனிந்தவாறு மவுனமாக நின்றான். ஆம், புலவர் மேல் வட்டை எறிந்த தன் செயலுக்காக அவன் நாணி வருந்திக் கொண்டிருந்தான். மாவளத்தானின் இந்த நிலையைக் கண்ட தாமப்பல் கண்ணனார் அதிர்ந்து போனார். நாவடக்கம் இன்றி தாம் சொன்ன சொற்களுக்காக அவர் அச்சமும், அளவில்லாத துயரும் கொண்டார். என்ன நிகழுமோ எனச் செயலற்று நின்ற அவர், தாம் மாவளத்தானுக்குப் பெரும் பிழை செய்திருக்க, அவனோ தமக்குப் பெரும் பிழை செய்ததுபோல நாணித் தலை கவிழ்ந்த பெரும்பண்பை நினைத்துக் கலங்கினார். இளவரசே! உன்னை நான் கூறத்தகாத சொல்லால் சுட்டதற்கு கோபப்படாமல் ஏதோ எனக்குக் குற்றம் செய்ததுபோல வெட்கமும், வேதனையும் படுகின்றாய். உனது இந்த அருஞ் செயல், எனக்கு எதனை உணர்த்துகின்றது தெரியுமா? சோழ மரபில் பிறந்தவர்கள் தமக்குப் பிறர் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளும் பண்புடையவர்கள் என்பதைத் தான். உண்மையில் நான்தான் உனக்குக் குற்றம் செய்தவன் (என்னைப் பொறுத்த ஏந்தலே) காவிரி நீர் கொழித்துக் கரையில் சேர்த்த ஆற்று மணலினும் பலவாக உன் வாழ்நாள் சிறக்க வேண்டும் (எண்ணற்ற ஆண்டுகள் வாழ வேண்டும். -புறநானூறு: 43)
இதனால் வசையைப் பொறுத்தவன் புகழ் பெறுவான் என்பது புலப்படுகின்றது அல்லவா? மாவளத்தான் புலவரைத் தன் பொறுமையால் வென்று விட்டான் என்பது வரலாறு. இன்று அறியாமையால் அல்லது ஆணவத்தால் நம்மைச் சிலர் வசைபாடலாம்: பழித்துப் பேசலாம். அவற்றை எல்லாம் பொறுமையால் நாம் வென்றுவிட வேண்டும். பொறுத்தவர் பூமி ஆள்வார்.