திருநாகேசுவரத்தில் உறையும் இறைவன், இறைவிக்கு இரண்டு வடிவங்கள் உண்டு. ஸ்ரீரங்கப்பட்டணம் கங்காதேசுவரர் கோயிலில் இரட்டை தட்சிணாமூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். சிதம்பரத்தில் மட்டும் நடராஜப்பெருமான் இரண்டு முறை (ஆனி, மார்கழி) தேரில் திருவீதியுலா வருகிறார். சிதம்பரத்துக்கு ஆல் மற்றும் தில்லையும்; திருமழபாடிக்கு மா மற்றும் வன்னிமரம் இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன. குடந்தை சாரங்கபாணி கோயிலில் தட்சிணாயன வாசல், உத்ராயணவாசல் என்ற இரண்டு வாசல்கள் உள்ளன.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இரண்டு கொடி மரங்கள் உள்ளன. வாழைமரம் தலவிருட்சமாக உள்ள இரண்டு திவ்ய தேசங்கள் திருக்கரம்பனூர் மற்றும் திருவெள்ளியங்குடி. இரண்டு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசங்கள் 21. திருச்செந்தூரில் குமாரஆகமம் மற்றும் சிவாகமம் ஆகிய இரு விதங்களில் பூஜை நடைபெறுகிறது. கும்பகோணம் அருகேயுள்ள கொருக்கை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இரண்டு நந்திகள் உள்ளன. திருவாப்பாடியில் வடக்கு பிராகாரத்திலும் அர்த்த மண்டபத்திலுமாக இரண்டு சண்டேஸ்வரர்கள் காணப்படுகின்றனர். திருவெள்ளறையில் தட்சிணாயனம், உத்ராயணம் என இரண்டு படிகள் உள்ளன. வயலூரில் சூரிய பகவான் தேவியர் இருவருடன் காட்சியளிக்கிறார்.