ஆயுதங்களை தனித்து பூஜிப்பது தனிச்சிறப்பு வாய்ந்த கலாசாரம். தீயசக்திகளை ஆயுதங்களைக் கொண்டே தெய்வங்கள் அழித்திருப்பதாக புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இந்த ஆயுதங்களை தெய்வமாக வழிபடுவதும், அரசனின் போர்வாளை அவ்வரசனாக எண்ணுவதும் மரபு. ராஜஸ்தான் பகுதி அரச பரம்பரையினர் மணமகன் இல்லாத போதும் கூட அவனது போர்வாளை மணமகனாக எண்ணி, மணமகளை மாலையிடச் செய்வர். இதுபோலவே முருகப்பெருமானின் வேலாயுதமும், பெருமாளின் சங்கு, சக்கரமும், சிவசக்தியின் சூலாயுதமும், இன்னும் பிற தெய்வங்களின் ஆயுதங்களும் பூஜைக்குரியனவாக அமைந்துள்ளன. ஆயுதம் என்பது தீயசக்திகளை அழிக்க தெய்வங்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று. அதை மனிதர்கள் பயன்படுத்த உரிமையில்லை. தொழில் தொடர்பான ஆயுதங்களை மட்டுமே நாம் பயன்படுத்தலாம். இதனால் தான் ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்.